2 மனைவிகள் இருந்தால் யாருக்கு ஓய்வூதியம்?- மத்திய அரசு புதிய நடைமுறை
- இறந்த ஊழியர்களுக்கு ஒரு மனைவி இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை.
- பெற்றோர்கள் தாய், தந்தை என இருவரும் உயிருடன் இருந்தால் குடும்ப ஓய்வூதியம் இறுதி சம்பளத்தின் 75 சதவீதம் வரை வழங்கப்படும்.
மத்திய அரசு ஊழியர்கள் மரணம் அடைந்தால், அவரது மனைவி அல்லது கணவனுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். ஒருவேளை அவர்கள் இறந்து இருந்தால் தகுதி இருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும்.
இறந்த ஊழியர்களுக்கு ஒரு மனைவி இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. அதுவே 2-வது மனைவியும் குடும்ப ஓய்வூதியம் உரிமை கோரும் போது பிரச்சனை ஏற்படுகிறது.
இதுதொடர்பாக பல்வேறு வழக்குகளும் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அதே போல் ஒவ்வொரு வழக்குகளிலும் ஒவ்வொரு விதமான தீர்ப்புகள் வருகின்றன. முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது இரண்டாம் மனைவியை திருமணம் செய்யக்கூடாது என்று திருமணச் சட்டம் சொல்கிறது. இதே சட்டத்தை மத்திய அரசின் ஓய்வூதிய விதிகள் 2021-ம் ஆண்டும் உறுதி செய்கிறது. இந்த நிலையில் ஓய்வூதிய துறை அனைத்து மத்திய அரசு துறைகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 மனைவிகள் இருந்தால், இரண்டாம் திருமணம் சட்டபூர்வமானதா? என்று சட்ட அமைச்சகத்துடன் ஆலோசனை செய்ய வேண்டும். அதில் ஒவ்வொரு வழக்கும் தனிப்பட்ட அடிப்படையில் தீர்மானிக்கப்படும். இரண்டாம் திருமணத்தின் சட்டப்பூர்வ நிலை தீர்மானிக்கப்பட்ட பிறகே ஓய்வூதியம் வழங்குவது முடிவு செய்யப்படும்.
இதுகுறித்து ஊழியர்கள் சிலர் கூறும்போது, முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது 2-வது திருமணம் எப்படி சட்டப்பூர்வமானதாக இருக்கும். இது ஏற்கனவே உள்ள குடும்ப ஓய்வூதிய சட்டத்தின் விதிகளை மீறுவது போல் உள்ளது. முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது, அவருக்கு தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்வது முற்றிலும் குற்றம். எனவே இந்த விவகாரத்தில் 2-ம் திருமணத்தை சட்டப்பூர்வமானதா என அலசி ஆராய்வது தேவையற்ற செய்ய செயல் என்றனர்.
தற்போது மத்திய அரசு ஊழியரின் இறுதி சம்பளத்தின் 30 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். தற்போது குறைந்தபட்சமாக ரூ.3,500-ம், அதிகபட்சமாக ரூ.27 ஆயிரம் வரையும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஆனால் அதில் சில விதிவிலக்குகள் உள்ளன. இது ஊழியர்கள் 7 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி இருந்தால் குடும்ப ஓய்வூதியம் இறுதி சம்பளத்தின் 50 சதவீதம் வரை அதிகரிக்கும்.
பெற்றோர்கள் தாய், தந்தை என இருவரும் உயிருடன் இருந்தால் குடும்ப ஓய்வூதியம் இறுதி சம்பளத்தின் 75 சதவீதம் வரை வழங்கப்படும். பெற்றோரில் ஒருவர் மட்டும் உயிருடன் இருந்தால் 60 சதவீதம் வரை வழங்கப்படும். ஊழியர்கள் பணி நேரத்தில் இறந்தால், 10 ஆண்டுகள் 50 சதவீதம் இறுதி சம்பளத்துடன் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டு பின்னர் அது 30 சதவீதம் குறைக்கப்படும்.