சர்வதேச வேலைவாய்ப்பில் புதிய சாதனை: மும்பை ஐ.ஐ.டி. பட்டதாரிக்கு ஆண்டுக்கு ரூ.3.7 கோடி சம்பளம்
- வர்த்தக சந்தை பாதிப்பு காரணமாகவே உள்நாட்டு சம்பளம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
- வருவாய் பெற்ற மாணவர்களின் பெயர் விபரங்களை ஐ.ஐ.டி. நிறுவனம் வெளியிடவில்லை.
மும்பை:
மும்பையில் உள்ள ஐ.ஐ.டி. நிறுவனத்தில் இந்த வருட கேம்பஸ் இண்டர்வியூ சமீபத்தில் நடைபெற்றது.
வழக்கமாக ஐ.ஐ.டி. பாம்பே கல்லூரியில் கேம்பஸ் வேலைவாய்ப்பில் என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப துறையை சேர்ந்த அதிகபடியான மாணவர்கள் சர்வதேச நிறுவனங்களுக்கு தேர்வாவார்கள்.
அதே போல இந்த ஆண்டும் கேம்பஸ் இண்டர்வியூவில் அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, நெதர்லாந்து, ஹாங்காங் மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் இருந்து ஏராளமான நிறுவனங்கள் கலந்து கொண்டன.
பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்ட இந்த முகாமில் சர்வதேச நிறுவனங்களில் சுமார் 300 வேலை வாய்ப்புகள் இருந்தது. இந்த இடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வுகளில் 194 இடங்கள் மாணவர்களால் நிரப்பப்பட்டது.
இதில் ஐ.ஐ.டி.-பம்பாய் இன்ஸ்டிடியூட் மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.3.7 கோடி சம்பளத்தில் சர்வதேச நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. இதன் மூலம் அந்த பட்டதாரி சர்வதேச வேலைவாய்ப்பில் இதுவரை இல்லாத அளவில் அதிக சம்பளம் பெறுபவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதே போல உள்நாட்டு வேலைவாய்ப்பில் அதிக வருவாயாக ரூ.1.7 கோடி சம்பளத்தில் ஒரு மாணவருக்கு வேலை கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு ஐ.ஐ.டி. பாம்பே கல்லூரியில் மிக உயர்ந்த சர்வதேச வேலைக்கான வருடாந்திர சம்பளம் ரூ.2.1 கோடியாக இருந்தது. இந்நிலையில் தற்போது அதை விட அதிகமாகவும் இதுவரை இல்லாத அளவிலும் ஆண்டு சம்பளம் ரூ.3.7 கோடி கிடைத்திருப்பது மிகப்பெரிய விஷயமாக கருதப்படுகிறது.
அதே நேரம் கடந்த ஆண்டு உள்நாட்டு சம்பளத்தில் அதிகபட்சம் ரூ.1.8 கோடியாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அது ரூ.1.7 கோடியாக குறைந்துள்ளது. வர்த்தக சந்தை பாதிப்பு காரணமாகவே உள்நாட்டு சம்பளம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தவிர ஆண்டு சம்பளம் ரூ.1 கோடிக்கு மேல் 16 மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இந்த வருவாய் பெற்ற மாணவர்களின் பெயர் விபரங்களை ஐ.ஐ.டி. நிறுவனம் வெளியிடவில்லை.
கடந்த ஆண்டு ஜூலை முதல் இந்த ஆண்டு ஜூன் வரையில் நடைபெற்ற கேம்பஸ் இண்டர்வியூ முகாம்களில் மொத்தம் 2,174 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 1,845 பேர் பங்கேற்றுள்ளனர். இதில் 1,516 பேருக்கு வேலை கிடைத்துள்ளது.