இந்தியா முழுவதும் ஐ.எஸ். பயங்கரவாதத்தை பரப்ப பாப்புலர் பிரண்ட் அமைப்பு முயற்சி- என்.ஐ.ஏ. தகவல்
- கேரள மாநிலத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது.
- பாப்புலர் பிரண்ட் அமைப்பு, உடற்கல்வி, யோகா என்ற போர்வையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு ஆயுத பயிற்சி அளித்ததாகவும் அதில் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம்:
இந்தியாவின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் நாடு முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாப்புலர் பிரண்ட் அமைப்பின் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அதிரடி சோதனை நடத்தியது.
இந்த சோதனையில் பாப்புலர் பிரண்ட் அமைப்பின் நிர்வாகிகள் பலர் கைது செய்யப்பட்டனர். அந்த அமைப்பின் செயல்பாட்டுக்கு தடையும் விதிக்கப்பட்டது.
கேரள மாநிலத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது. மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து என்.ஐ.ஏ. தீவிர விசாரணை நடத்தி வந்தது. இதன் முடிவில் கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், சுமார் 50 பேர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பாப்புலர் பிரண்ட் அமைப்பு, உடற்கல்வி, யோகா என்ற போர்வையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு ஆயுத பயிற்சி அளித்ததாகவும் அதில் தெரிவித்துள்ளது.
அதோடு இந்தியா முழுவதும், ஐ.எஸ். பயங்கரவாதத்தை பரப்ப பாப்புலர் பிரண்ட் அமைப்பு முயற்சித்ததாகவும் குற்றப்பத்திரிகையில் என்.ஐ.ஏ தெரிவித்து உள்ளது.