2024 பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட்டால் வெற்றி பெறலாம்- நிதிஷ்குமார்
- தேசிய ஜனநாயக கூட்டணியை நாங்கள் உடைத்த பிறகு எல்லாம் நன்றாக இருந்தது.
- ஆனால் 2017 இல் மீண்டும் அவர்களுடன் கைகோர்த்து தவறு செய்தோம்.
பாட்னா:
பீகார் தலைநகர் பாட்னாவில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தேசிய தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உள்பட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார், பீகாரின் ஏக்நாத் ஷிண்டேவாக ஆர்.சி.பி. சிங்கை உருவாக்கி ஐக்கிய ஜனதா தளம் கட்சியை தனிமைப்படுத்தவும், மாநிலத்தில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தவும் பாஜக விரும்பியது என்று கூறினார்.
முன்பு நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியை உடைத்த பிறகு எல்லாம் நன்றாக இருந்தது என்றும், ஆனால் 2017 இல் மீண்டும் அவர்களுடன் கைகோர்த்து தவறு செய்தோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக சில மாநிலங்களில் பலர் எங்களை விட்டு பிரிந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார். 2024 பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட்டால் பெரிய வெற்றியை பெற முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.