இந்தியா

பிரிஜ் பூஷனுக்கு எதிரான பாலியல் புகாருக்கு போதிய சான்றுகள் கிடைக்கவில்லையா?: டெல்லி போலீஸ் விளக்கம்

Published On 2023-06-01 02:11 GMT   |   Update On 2023-06-01 02:11 GMT
  • வீராங்கனைகள் ஹரித்துவார் கங்கை நதியில் தங்கள் பதக்கங்களை வீச முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
  • மத்திய அரசுக்கு விவசாய சங்கத்தினர் 5 நாட்கள் அவகாசம் அளித்துள்ளனர்.

புதுடெல்லி :

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகார் கூறியுள்ள மல்யுத்த வீராங்கனைகள், அவரை கைது செய்ய வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய பாராளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற அவர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். நேற்று முன்தினம் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் ஹரித்துவார் கங்கை நதியில் தங்கள் பதக்கங்களை வீச முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விவசாய சங்கத் தலைவர் நரேஷ் திகாயத் அவர்களைத் தடுத்து, சமாதானப்படுத்தினார். அதையடுத்து வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை கங்கையில் வீசும் முடிவை தற்காலிகமாக கைவிட்டு திரும்பிச் சென்றனர். இந்த விவகாரத்தில் முடிவெடுப்பதற்கு மத்திய அரசுக்கு விவசாய சங்கத்தினர் 5 நாட்கள் அவகாசம் அளித்துள்ளனர்.

இந்நிலையில், மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனை கைது செய்வதற்கு அவருக்கு எதிராக போதுமான சான்றுகளை கண்டுபிடிக்கவில்லை டெல்லி போலீஸ் கூறியதாக தகவல் வெளியானது.

இதுதொடர்பாக டெல்லி போலீசார் நேற்று டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், 'மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள 2 வழக்குகளில் போதுமான சான்றுகளை கண்டுபிடிக்கவில்லை என போலீஸ் கூறியதாக சில டி.வி. சேனல்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போலீஸ் அவ்வாறு தெரிவித்ததாக வெளியான செய்தி தவறு. உணர்வுபூர்மான இந்த வழக்கில், மிகுந்த உணர்வோடு விசாரணை நடைபெற்றுவருகிறது' என்று விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில் மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாக்கூர், 'டெல்லி போலீஸ் தனது விசாரணையை முடிக்கும்வரை மல்யுத்த வீரர், வீராங்கனைகள் காத்திருக்க வேண்டும். மல்யுத்தத்தையும், மல்யுத்த வீரர்களாக விரும்புவோரையும் பாதிக்கும் எந்த நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபடக்கூடாது' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 'நாங்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு ஆதரவாகத்தான் உள்ளோம்' என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News