தீவிர அரசியலால் படப்பிடிப்புக்கு நேரமில்லை -பவன் கல்யாண்
- பவன் கல்யாண் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறார்.
- பவன் கல்யாணின் கவனம் முழுவதும் அரசியல் பக்கம் திரும்பி முழு நேர அரசியல்வாதியாக உருவெடுத்து உள்ளார்.
ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாண் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார்.
தெலுங்கானாவில் வருகிற 30-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது இதையொட்டி பவன் கல்யாண் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறார். இதனால் ஓய்வு இன்றி கடும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இவரது நடிப்பில் ஓ.ஜி, உஸ்தாத் பகத்சிங், ஹரிஹர வீரமல்லூர் ஆகிய 3 படங்கள் முடிவடையும் தருவாயில் உள்ளது. ஆனால் பவன் கல்யாண் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருவதால் ஒப்பந்தம் செய்யப்பட்ட திரைப்படங்களை முடித்துக் கொடுக்க முடியாமல் உள்ளார்.
இந்நிலையில் பவன் கல்யாண் தெலுங்கானா சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஆந்திராவில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி வைத்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்து வருகின்றனர்.
பவன் கல்யாணின் கவனம் முழுவதும் அரசியல் பக்கம் திரும்பி முழு நேர அரசியல்வாதியாக உருவெடுத்து உள்ளார்.
திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்ட 3 படங்களையும் முடித்துக் கொடுக்க நேரம் ஒதுக்க வேண்டுமென பவன் கல்யாணிடம் வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் அவரது தரப்பில் படப்பிடிப்பிற்கு நேரமில்லை என கூறுகின்றனர்.