ஆன்லைனில் வாங்கிய கடனை செலுத்தாததால் மிரட்டல்- வாலிபர் தற்கொலை
- பெண்ணுடன் ஆபாசமாக இருப்பதுபோல் மார்பிங் வீடியோவை மனைவிக்கு அனுப்பியதால் ராஜேஷ் தற்கொலை செய்து கொண்டார்.
- ராஜேஷ் போட்டோவை மார்பிங் செய்து அவரது மனைவிக்கு அனுப்பியது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், என்.டி.ஆர் மாவட்டம், இப்ராகிம் பட்டணம் மண்டலம், சுராய பலேனியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35). இவர் இங்கிலாந்து பிரிட்ஜ் கோர்ஸ் நிறுவனத்தில் ஆலோசகராக வேலை செய்து வந்தார். ஆன்லைன் மூலம் இவர் லோன் ஆப்பில் கடன் வாங்கியுள்ளார்.
வாங்கிய கடனை மொத்தமாக திருப்பி செலுத்தி உள்ளார். இருப்பினும் மேலும் ரூ 10 ஆயிரம் கட்ட வேண்டும் என லோன் ஆப் நிறுவனத்தினர் ராஜேஷுக்கு நெருக்கடி கொடுத்தனர்.
இதனால் லோன் ஆப் நிறுவனத்தினர் போன் செய்தபோது போனை எடுக்காமல் இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த லோன் ஆப் நிறுவனத்தினர் ராஜேஷ் வேறு ஒரு பெண்ணுடன் ஆபாசமாக இருப்பது போலவும் ஆபாசமான பெண்ணிடம் வீடியோ காலில் பேசுவது போலவும் போட்டோ, வீடியோவை மார்பிங் செய்து அவரது மனைவி ரத்தினகுமாரிக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்தனர்.
இதனை கண்ட ரத்தினகுமாரி, ராஜேஷிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது ராஜேஷ் லோன் ஆப் நிறுவனத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் அவர்கள் இதுபோன்று போட்டோ வீடியோவை மாப்பிங் செய்து அனுப்பியதாக மனைவியிடம் தெரிவித்தார்.
லோன் ஆப் மூலம் வாங்கிய கடனை அந்த பெண்ணுக்கு தான் செலவு செய்தாயா? வேறு எதற்காக கடன் வாங்கினாய் என சண்டையிட்டார். மேலும் ரத்தினகுமாரி ராஜேஷிடம் கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதனால் விரக்தி அடைந்த ராஜேஷ் நேற்று காலை நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என மனைவிக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பி விட்டு வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கணவர் அனுப்பிய மெசேஜை பார்த்த ரத்தினகுமாரி அதிர்ச்சி அடைந்து அவருக்கு பலமுறை போன் செய்தார். ராஜேஷ் போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது ராஜேஷ் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதை கண்டு அவர் கதறி துடித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த இப்ராகிம் பட்டிணம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜேஷ் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேஷ் போட்டோவை மார்பிங் செய்து அவரது மனைவிக்கு அனுப்பியது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.