ஒடிசா ரெயில் விபத்து - 90 ரெயில்கள் முழுமையாக ரத்து
- ரெயில் விபத்து காரணமாக இதுவரை 90 ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
- மேலும், ஒடிசா ரெயில் விபத்தால் 6 ரெயில் சேவைகளை தெற்கு ரெயில்வே ரத்து செய்துள்ளது.
புதுடெல்லி
ஒடிசாவில் நடைபெற்ற கோர ரெயில் விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 800-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில், பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், ஒடிசா ரெயில் விபத்து காரணமாக அந்த வழியாகச் செல்லும் பல ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ரெயில் விபத்து காரணமாக இதுவரை 90 ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என ரெயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், 46 ரெயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதுடன்,11 ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஒடிசா ரெயில் விபத்து காரணமாக 6 ரெயில் சேவைகளை தெற்கு ரெயில்வே ரத்து செய்துள்ளது.
மங்களூருவில் இருந்து இன்று இரவு 11 மணிக்கு சந்திரகாஞ்சி செல்லும் விவேக் விரைவு ரெயில், சென்னையில் இருந்து நாளை காலை 7 மணிக்கு ஷாலிமர் புறப்படும் கோரமண்டல் விரைவு ரெயில், சென்னையில் இருந்து நாளை காலை 8.10 மணிக்கு சந்திரகாச்சி புறப்படும் ஏ.சி. விரைவு ரெயில் உள்ளிட்ட 6 ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.