சபாநாயகர் பதவிக்கு பா.ஜனதா-காங்கிரஸ் இடையே நேரடி போட்டி: ஓம்பிர்லா-சுரேஷ் வேட்புமனு தாக்கல்
- முன்னாள் சபாநாயகர் ஓம்பிர்லா பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
- பாராளுமன்றத்தில் ஆளும் பாரதிய ஜனதா கூட்டணிக்கு அதிக எம்.பி.க்கள் உள்ளனர்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா தலைமை யிலான கூட்டணி 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
கடந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்ததால் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரை தங்களது விருப்பத்துக்கு ஏற்ப தேர்வு செய்தனர். ஆனால் இந்த தடவை பாரதிய ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் சபாநாயகர் தேர்தல் எப்படி அமையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
பாராளுமன்ற வரலாற்றில் இதுவரை சபாநாயகர் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டது இல்லை. அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலுடன் ஏகமனதாக தேர்வாகி இருக்கிறார். ஆனால் இந்த தடவை இந்தியா கூட்டணிக்கு 232 எம்.பி.க்கள் இருப்பதால் அவர்கள் வேட்பாளரை நிறுத்தக்கூடும் என்று தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் பாரதிய ஜனதா சார்பில் புதிய சபாநாயகரை தேர்வு செய்ய ஓசையின்றி ஆலோசனை நடந்து வந்தது. ஆந்திராவை சேர்ந்த புரந்தேஸ்வரி புதிய சபாநாயகர் ஆகலாம் என்று தகவல்கள் வெளியானது.
ஆனால் கடந்த சில தினங்களில் அதில் மாற்றம் ஏற்பட்டு கடந்த முறை சபாநாயகராக இருந்த ஓம்பிர்லா மீண்டும் தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. சபாநாயகர் தேர்தலுக்கான அறிவிக்கையை பாராளுமன்ற செயலாளர் ஏற்கனவே வெளியிட்டு இருந்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 12 மணிக்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதன் காரணமாக நேற்று மாலை முதல் புதிய சபாநாயகர் தொடர்பாக அடுத்தடுத்து பா.ஜ.க. தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா வீட்டில் நேற்று இரவு நீண்ட நேரம் ஆலோசனை நடந்தது. ராஜ்நாத்சிங், அமித்ஷா இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு விவாதித்தனர்.
இன்று காலை சபாநாயகர் தேர்தல் தொடர்பாக மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் அனைத்துக் கட்சி தலைவர்களுடன் தொடர்பு கொண்டு பேசினார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோருடன் அவர் போனில் பேசினார்.
ஏற்கனவே அவர் இது தொடர்பாக தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் ஆகியோருடனும் ஆலோசனை நடத்தி இருந்தார். இதையடுத்து இன்று காலை சபாநாயகர் தேர்வு தொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்களுடனும் ஒருமித்த கருத்து உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் பா.ஜ.க. தலைவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டனர்.
காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, ராகுல் இருவரிடமும் ராஜ்நாத்சிங் போனில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ராகுல் ஒரு நிபந்தனையை விதித்தார். துணை சபாநாயகர் பதவியை எதிர்கட்சிகளுக்கு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதற்கு ராஜ்நாத்சிங் மற்ற தலைவர்களுடன் ஆலோசித்து பதில் சொல்வதாக தெரிவித்தார். ஆனால் அவர் மீண்டும் காங்கிரஸ் தலைவர்களை தொடர்பு கொள்ளவில்லை. இதனால் காங்கிரஸ் தலைவர்கள் தங்களை பா.ஜ.க. அவமதிப்பதாக கருதினார்கள்.
ராகுல்காந்தி இது தொடர்பாக பேட்டியளித்தபோது, "சபாநாயகர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை ஆதரிக்க நாங்கள் தயார். ஆனால் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு தர வேண்டும்" என்று கூறினார். இதையடுத்து பா.ஜ.க.-காங்கிரஸ் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது.
மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் அலுவலகத்துக்கு காங்கிரசை சேர்ந்த கே.சி.வேணுகோபால், தி.மு.க.வை சேர்ந்த டி.ஆர்.பாலு இருவரும் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது துணை சபாநாயகர் பதவியை காங்கிரசுக்கு தர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் அதை ஏற்க ராஜ் நாத்சிங் மறுத்து விட்டார்.
இதையடுத்து பா.ஜ.க.-காங்கிரஸ் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் ராஜ்நாத்சிங் அலுவலகத்தில் இருந்து கே.சி.வேணுகோபாலும், டி.ஆர்.பாலுவும் புறப்பட்டு சென்றனர்.
அடுத்த சில நிமிடங்களில் சபாநாயகர் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் என்று அறிவிப்பு வெளியானது. கேரளாவை சேர்ந்த 8 தடவை எம்.பி.யான சுரேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
அடுத்த சில நிமிடங்களில் பாராளுமன்ற அலுவலகத்தில் சுரேஷ் தனது மனுவை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து ஆளும் கூட்டணி சார்பில் முன்னாள் சபாநாயகர் ஓம்பிர்லா வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதன் மூலம் சபாநாயகர் பதவிக்கு பாரதிய ஜனதா-காங்கிரஸ் இடையே நேரடி போட்டி ஏற்படுவது உறுதியாகி இருக்கிறது. பாராளுமன்ற வரலாற்றில் 1946-ம் ஆண்டு முதல் இதுவரை சபாநாயகர் பதவிக்கு போட்டி ஏற்பட்டதே கிடையாது.
இதற்கு முன்பு 17 தடவை அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தில் சபாநாயகர் அனைத்துக் கட்சிகளாலும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது காங்கிரஸ் கட்சி துணை சபாநாயகர் பதவியை முன்நிறுத்தி போட்டியை உருவாக்கி இருக்கிறது. இதற்கு பாரதிய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் முன்னாள் சபாநாயகர் ஓம்பிர்லா பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அதன் பிறகு ஓம்பிர்லா வீட்டில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் அமித்ஷா, ராஜ்நாத்சிங் மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். நாளை சபாநாயகர் பதவிக்கு ஓட்டெடுப்பு நடக்கும்போது எத்தகைய நடைமுறைகளை கையாள்வது என்று ஆலோசனை நடத்தினார்கள்.
பாராளுமன்றத்தில் ஆளும் பாரதிய ஜனதா கூட்டணிக்கு அதிக எம்.பி.க்கள் உள்ளனர். எனவே ஓட்டெடுப்பில் ஓம்பிர்லா வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2-வது முறையாக சபாநாயகர் ஆகும் ஓம்பிர்லா ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்.