ஒரே நாடு ஒரே தேர்தலை மக்கள் ஏற்க மாட்டார்கள்.. காங்கிரஸ் கண்டனம்- பாஜக பதிலடி
- நாட்டு மக்கள் நிச்சயம் இதை ஏற்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
- இளைஞர்கள் இந்த திட்டத்துக்கு அதிக ஆதரவளித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை தனது ஆட்சிக் காலத்துக்குள்ளாகவே அமல் படுத்த பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதுதொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஆய்வை இறுதி செய்து அந்த அறிக்கையை மத்திய அமைச்சரவையில் சமர்ப்பித்தது. இந்நிலையில் இன்று மோடி தலைமயிலான மத்திய அமைச்சரவை ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. தொடர்ந்து எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இது மசோதாவாக தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த திட்டத்துக்குக் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது, ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது. தற்போது இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்பது தேர்தல் வரும் சமயத்தில் பாஜக செய்யும் அரசியல் தந்திரமே ஆகும். தேர்தல் வரும்போதெல்லாம் பாரதீய ஜனதா கட்சி இதுபோன்ற விஷயங்களை கூறும். நாட்டு மக்கள் நிச்சயம் இதை ஏற்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள மத்திய அமைச்சர் தொலைத் தொடர்புத் துறை அஸ்வினி வைஷ்ணவ், ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் எதிர்க்கட்சி அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த திட்டம் பற்றி கருத்து தெரிவித்தவர்களில் 80 சதவீதம் பேர் நேர்மறையான ஆதரவையே வழங்கியுள்ளனர். குறிப்பாக இளைஞர்கள் இந்த திட்டத்துக்கு அதிக ஆதரவளித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.