இந்தியா

1,250 கோவில்களில் பூஜைகளுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி- திருவிதாங்கூர் தேவசம்போர்டு

Published On 2024-05-03 05:34 GMT   |   Update On 2024-05-03 05:34 GMT
  • முன்பெல்லாம் தூரத்தில் உள்ள கோவில்களில் பூஜை செய்வதற்கு தெரிந்தவர்கள் யாராவது சென்று பதிவு செய்ய வேண்டும்.
  • ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பதால் பக்தர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கிறது.

திருவனந்தபுரம்

கேரள மாநிலத்தில் சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்கள் ஏராளமாக இருக்கின்றன. திருவிதாங்கூர் தேவ சம்போர்டு கட்டுப்பாட்டில் சபரிமலை அய்யப்பன் கோவில் மட்டுமின்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.

இந்த கோவில்களில் பலவற்றில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பூஜைகள் முன்கூட்டியே திட்டமிடப்ப டுகிறது. அந்த கோவில்களில் நடக்கும் பூஜைகளை மக்கள் செய்வதற்கு முன்பதிவு செய்ய வேண்டும். சபரி மலையில் நடத்தப்படும் படிபூஜை உள்ளிட்ட பல்வேறு வழிபாடு களுக்கு இன்னும் பல ஆண்டுகளுக்கு முன்பதிவு முடிந்துவிட்டது.

இந்நிலையில் திரு விதாங்கூர் தேவசம்போர்டு தனது கட்டுப்பாட்டில் உள்ள 1,250 கோவில்களில் துலாபாரம், திருமஞ்சனம் உள்ளிட்ட பூஜைகள் செய்ய பக்தர்கள் வீட்டில் இருந்த படியே முன்பதிவு செய்யும் முறையை அறிமுகம் செய்திருக்கிறது. இதனை சைபர் தடயவியல் நிபுணர் வினோத் பட்டாத்திரிபட் முன்னின்று நடத்துகிறார்.

மேலும் சபரிமலை நிர்வாக அதிகாரி பிஜூ ஒருங்கிணைப்பாளராக பணியாற்றுகிறார். இதனை செயல்படுத்த 150பேர் அடங்கிய அமலாக்க குழுவை திருவிதாங்கூர் தேவ சம்போர்டு அமைத்திருக்கிறது.

முன்பெல்லாம் தூரத்தில் உள்ள கோவில்களில் பூஜை செய்வதற்கு தெரிந்தவர்கள் யாராவது சென்று பதிவு செய்ய வேண்டும். ஆனால் தற்போது இதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பதால் பக்தர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கிறது.

பக்தர்கள் முன்பதிவு செய்ய வசதியாக ஒவ்வொரு கோவிலின் வலை பக்கமும் மலையாள நாட்காட்டியுடன் இணைக்கப்படும். மலையாள மாதத்தின் நட்சத்திரத்தை பக்தர்கள் தேர்ந்தெடுப்பதன் மூலம், ஆங்கிலநாள்காட்டியில் தொடர்புடைய தேதியை அவர்கள் கண்டறிய முடியும்.

Tags:    

Similar News