இந்தியா

பாரா ஒலிம்பிக்ஸ்: பதக்கம் வென்றவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கிய மத்திய அமைச்சர்

Published On 2024-09-10 14:17 GMT   |   Update On 2024-09-10 14:17 GMT
  • இந்திய வீரர், வீராங்கனைகள் மொத்தம் 29 பதக்கங்களை வென்று அசத்தினர்.
  • நாம் நமது திறமையை சிறப்பான முறையில் வெளிப்படுத்த வேண்டும்.

பிரான்ஸ் நாட்டின் பாரீசில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பதக்கங்களை வென்று அசத்தியது. முன்னதாக கடந்த டோக்கியோ பாராலிம்பிக் தொடரில் இந்தியா 19 பதக்கங்கள் வென்று இருந்த நிலையில், இந்த முறை முந்திய இந்திய வீரர், வீராங்கனைகள் மொத்தம் 29 பதக்கங்களை வென்று அசத்தினர்.

இதில் 7 தங்கம், 9 வெள்ளி மற்றும் 13 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். பாராஒலிம்பிக் தொடரில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு பரிசுத்தொகை அறிவித்தது. அதன்படி தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.75 லட்சமும், வெள்ளிப்பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.50 லட்சமும், வெண்கல பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.30 லட்சம் வழங்கப்பட்டது.

 


பரிசு தொகைக்கான காசோலையை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கினார். இதுதவிர அணிகள் பிரிவில் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.22.5 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

பரிசு தொகை வழங்கி பிறகு பேசிய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, "2028 லாஸ் ஏஞ்சல்ஸ் பாராலிம்பிக்ஸில் அதிக பதக்கங்கள் மற்றும் தங்கப் பதக்கங்களை வெல்வதற்கு ஏதுவாக நம் பாரா-தடகள வீரர், வீராங்கனைகளுக்கு அனைத்து வசதிகளையும் வழங்குவோம்."

"நாட்டிற்கு விருதுகளை பெற்றுத்தந்துள்ளீர்கள், வாழ்வின் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதை வெளிப்படுத்தி இருக்கின்றீர்கள். ஆனால் நீங்கள் இதோடு நிறுத்தக்கூடாது. லாஸ் ஏஞ்சல்ஸில் (2028) அடுத்த பாராலிம்பிக்ஸ் போட்டிக்காக பயிற்சியை துவங்க வேண்டும். இதன் மூலம் நாம் அதிக பதக்கங்களை வெல்ல முடியும்."

"2036-இல் இந்தியா ஒலிம்பிக்ஸ் மற்றும் பாரா ஒலிம்பிக்ஸ் நடத்தும் போது, நாம் நமது திறமையை சிறப்பான முறையில் வெளிப்படுத்த வேண்டும்," என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News