எதிர்க்கட்சிகளின் கூச்சல் அமளியால் 2-வது நாளாக முடங்கியது பாராளுமன்றம்
- பிரதமர் மோடி இரு அவைகளிலும் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தல்
- கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு விவாதிக்க சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததால் கூச்சல் குழப்பம்
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளே எதிர்கட்சி எம்.பி.க்கள் மணிப்பூரில் 2 பெண்கள் பாலியல் கொடூரம் செய்யப்பட்டது தொடர்பான விவகாரத்தை எழுப்பினார்கள்.
மணிப்பூரில் நடந்து வரும் வன்முறை குறித்தும், எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி கருத்து தெரிவிக்காமல் மவுனம் சாதிப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. பிரதமர் மோடி மவுனத்தை கலைத்து மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் பாராளு மன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை இரண்டும் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இரு அவைகளிலும் எந்த பணிகளும் நடைபெறாமல் முடக்கம் ஏற்பட்டது. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளி செய்ததால் விவாதம் எதுவும் நடைபெறாமல் நாள் முழுவதும் பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.
முன்னதாக இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியதும் கேள்வி- நேரம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று முன்னதாக நோட்டீஸ் கொடுத்து இருந்தனர்.
தி.மு.க. எம்.பி.க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கினார்கள். ஆனால் அதை சபாநாயகர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து பாராளுமன்றத்தில் இன்று மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
அவர்கள் தங்கள் இருக்கையை விட்டு எழுந்து மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி இரு அவைகளிலும் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரி முழக்கங்கள் எழுப்பினார்கள். இதனால் பாராளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது.
இந்த அமளிகளுக்கு மத்தியில் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் எழுந்து மணிப்பூர் விவகாரம் முக்கியமான விஷயம். சூழ்நிலையை புரிந்து கொள்ள முடிகிறது. மணிப்பூரில் நடந்துள்ளது ஒட்டு மொத்த நாட்டிற்கே அவமானம் என பிரதமர் மோடி கூறி உள்ளார். இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மணிப்பூர் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக இருக்கிறது. அனைத்து கட்சி கூட்டத்திலும் இதனை தெரிவித்து இருக்கிறேன். பாராளுமன்றத்திலும் அதை உறுதியாக கூறுகிறேன். ஆனால் இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த விடக்கூடாது என சில கட்சிகள் நினைத்து செயல்படுகின்றன என்று பேசினார்.
ஆனால் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேச்சை ஏற்க எதிர்க்கட்சியினர் மறுத்துவிட்டனர். பிரதமர் மோடி இரு அவைகளிலும் இதற்கு விரிவாக பேச வேண்டும் என கோரி அவர்கள் கோஷங்களை எழுப்பியவாறு இருந்தனர்.
சில எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கையில் பதாகைகள் ஏந்தி சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினார்கள். அவர்களை பார்த்து சபாநாயகர் ஓம் பிர்லா அனைவரும் அமைதியாக இருக்கைக்கு சென்று அமருமாறு கூறினார்.
ஆனால் சபாநாயகர் வேண்டுகோளை ஏற்காமல் எதிர்க்கட்சியினர் ஒட்டு மொத்தமாக தொடர்ந்து கோஷங்கள் போட்டவாறு இருந்தனர். இதனால் சபையில் யார்? என்ன பேசுகிறார்கள் என கேட்க முடியாத அளவுக்கு நிலைமை மாறியது. சபையில் ஒரே கூச்சலும், குழப்பமுமாக இருந்தது.
இதையடுத்து பாராளுமன்றம் கூடிய சில நிமிடங்களிலேயே சபையை பகல் 12 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். பின்னர் 12 மணிக்கு மீண்டும் பாராளுமன்றம் கூடியது. சபை கூடியதுமே எதிர்க்கட்சிகள் மறுபடியும் பிரச்சினையை கிளப்பினார்கள்.
மணிப்பூர் பற்றி எரிகிறது. பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? எதிர்கட்சிகள் கேள்விக்கு பிரதமர் உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினார்கள். அவர்கள் இருக்கையை விட்டு எழுந்து தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பியவாறு இருந்தனர்.
கையில் பதாகைகள் ஏந்தியும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள். அவர்களை இருக்கையில் அமருமாறு சபையை நடத்திய ராஜேந்திர அகர்வால் கூறினார். ஆனால் தொடர்ந்து பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்ததால் சபை நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கியது. இதனால் வருகிற திங்கட்கிழமைக்கு சபையை ஒத்தி வைத்து அவைத்தலைவர் உத்தரவிட்டார்.
மணிப்பூர் விவகாரம் மேல்சபையிலும் இன்று புயலை கிளப்பியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அங்கும் மணிப்பூர் சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் போட்டனர். இடைவிடாமல் அவர்கள் முழக்கங்கள் எழுப்பிய வண்ணம் இருந்ததால் சபை நடவடிக்கை 2-வது நாளாக இன்றும் முடங்கியது.
இதனால் மேல்-சபையை பிற்பகல் 2.30 மணி வரை ஒத்தி வைத்து அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் உத்தரவிட்டார். மணிப்பூர் விவகாரத்தால் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று 2-வது நாளாக விவாதம் எதுவும் நடைபெறாமல் முடங்கியது.