இந்தியா

மதவாத அரசியலுக்கு பாராளுமன்ற தேர்தல் முடிவு முற்றுப்புள்ளி-அகிலேஷ் யாதவ்

Published On 2024-07-02 08:07 GMT   |   Update On 2024-07-02 08:07 GMT
  • மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது நேற்றும் இன்றும் நம்பிக்கை இல்லை.
  • ஜூன் 4-ந் தேதி வகுப்புவாத அரசியலில் இருந்து சுதந்திரம் பெற்ற நாளாகும்.

புதுடெல்லி:

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று சமாஜ்வாடி கட்சித் தலைவரும், அந்த கட்சியின் மக்களவைக் குழு தலைவருமான அகிலேஷ் யாதவ் இன்று பேசியதாவது:-

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு தார்மீக வெற்றியாகும். இந்தியா கூட்டணிக்கான பொறுப்பை தேர்தல் மூலம் மக்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.

இந்த தேர்தல் முடிவு மதவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஜூன் 4-ந் தேதி வகுப்புவாத அரசியலில் இருந்து சுதந்திரம் பெற்ற நாளாகும்.

இந்த தேர்தல் நேர்மறை அரசியலின் புதிய சகாப்தம். அரசியல் சாசனத்துக்கு ஆதரவானவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அரசியல் சாசனம் வென்றுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது நேற்றும் எனக்கு நம்பிக்கை இல்லை. இன்றும் நம்பிக்கை இல்லை. 80-க்கு 80 தொகுதிகளில் நாங்கள் வென்றாலும் நம்பிக்கை வராது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்த பிரச்சினையை தொடர்ந்து எழுப்புவோம்.

சமூக நீதிக்காக சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம். ராணுவத்துக்கு ஆட்களை சேர்க்கும் அக்னிபத் திட்டத்தை ஒரு போதும் ஏற்க மாட்டோம்.

வினாத்தாள் கசிவது ஏன்? உண்மை என்ன வென்றால் இளைஞர்களுக்கு வேலை கொடுக்க அரசு தயாராக இல்லாததால் அரசே வினாத்தாளை கசிய விடுகிறது.

பைசாபாத் தொகுதியில் பா.ஜனதாவின் தோல்வி ஒரு வேளை ராமரின் விருப்பமாக இருக்கலாம். அயோத்தியின் இந்த வெற்றி இந்திய ஜனநாயகத்தின் வாக்காளர்களின் வெற்றியாகும்.

இவ்வாறு அகிலேஷ் யாதவ் பேசினார்.

Tags:    

Similar News