உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட பதஞ்சலி நிறுவனம்
- நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆச்சார்யா பால்கிருஷ்ணா, யோகா குரு ராம்தேவ் ஆகியோர் பதில் அளிக்கவில்லை.
- ஏப்ரல் 2-ந்தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.
பதஞ்சலி தவறான விளம்பரங்களை விளம்பரப்படுத்திய விவகாரத்தில், அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா மற்றும் யோகா குரு ராம்தேவ் ஆகியோர் ஏப்ரல் 2-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் ஆச்சார்யா பால்கிருஷ்ணா உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில் "சட்டத்தின் மீது மிகுந்த மரியாதை தனக்கு உண்டு. மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற விளம்பரங்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படாது என நிறுவனம் உறுதி அளிக்கும். பொருட்கள் மூலமாக மக்கள் ஆரோக்கியமான வாழ்வை வாழ அறிவுறுத்துவது மட்டுமே நிறுவனத்தின் நோக்கம்" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக,
பதஞ்சலி தவறான விளம்பரங்களை விளம்பரப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே எச்சரித்திருந்தது. ஆனால், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி மீண்டும் விளம்பரப்படுத்தியதாக, பதஞ்சலி நிர்வாகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பாக நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா மற்றும் யோகா குரு ராம்தேவ் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இருவரும் பதில் அளிக்கவில்லை. அதேவேளையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர்.
இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று முன்தினம் ஹீமா கோலி, அசானுதீன் அமானுல்லா ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அவமதிப்பு தொடர்பாக விளக்கம் அளிக்க கேட்டுக்கொண்ட போதிலும், விளக்கம் அளிக்காமல் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளீர்கள். ஆனால் நீதிமன்றத்தில் பதில் அளிக்கவில்லை என நீதிபதிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.
மேலும், பதஞ்சலி நிர்வாக இயக்குர் ஆச்சார்யா பால்கிருஷ்ணாவுக்கு நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் சம்மன் அனுப்பியது. அதேபோல் பதஞ்சலின் துணை நிறுவனரான ராம்தேவ் ஏப்ரல் 2-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.