இந்தியா

யோகி ஆதித்யநாத் போல் செயல்படுங்கள்- பெண் மந்திரிக்கு பவன் கல்யாண் எச்சரிக்கை

Published On 2024-11-05 05:25 GMT   |   Update On 2024-11-05 05:25 GMT
  • குற்றவாளிகளை தண்டிப்பதில் ஜாதி மற்றும் மதத்தை புறக்கணிக்குமாறு காவல்துறையிடம் கேட்டுக்கொள்கிறேன்.
  • சிறுமிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் சமூக நல விடுதிகளை கண்காணிக்க வேண்டும்.

திருப்பதி:

ஆந்திர மாநிலத்தில் கடந்த சில மாதங்களில் 70-க்கும் மேற்பட்ட பெண்கள் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனை மோசமாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் ஆந்திர மாநில துணை முதல் மந்திரி பவன் கல்யாண் பித்தாபுரம் தொகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ஆந்திராவில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்து வருகிறது. இந்த சம்பவங்களுக்கு பெண் மந்திரி வாங்கலப்புடி அனிதா பொறுப்பேற்க வேண்டும். நிலைமை சீரடையவில்லை என்றால் உள்துறையை நான் எடுத்துக் கொள்வேன். உங்கள் பணிகளை நன்றாக செய்யுங்கள். இதே நிலை நீடித்தால் நான் முடிவு எடுக்க வற்புறுத்துவேன்.

நான் உள்துறை அமைச்சரானால் நிலைமை வேறுவிதமாக இருக்கும். மேலும் உளவுத்துறை அதிகாரிகள் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.

குற்றவாளிகளை தண்டிப்பதில் ஜாதி மற்றும் மதத்தை புறக்கணிக்குமாறு காவல்துறையிடம் கேட்டுக்கொள்கிறேன். குற்றவாளிகளுக்கு ஜாதியில்லை. எந்த மதத்தையும் அவர்கள் பின்பற்றுவது இல்லை.

சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் வெளியே செல்லும்போது மக்கள் திட்டுவார்கள். குற்றவாளிகள் மீது யோகி ஆதித்யநாத் பின்பற்றும் கொள்கையை ஆந்திராவிலும் பின்பற்ற வேண்டும். யோகி ஆதித்யநாத் போல செயல்படுங்கள்.

சிறுமிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் சமூக நல விடுதிகளை கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டணி கட்சியில் உள்ள பெண் மந்திரியை பவன் கல்யாண் தாக்கி எச்சரிக்கை விடுத்த சம்பவம் ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இதற்கு தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த மந்திரி நாராயணா மறுப்பு தெரிவித்தார். எந்த ஒரு துறையின் செயல்பாடுகள் குறித்தும் கருத்து தெரிவிக்க முதல் மந்திரி, துணை முதல் மந்திரி ஆகியோருக்கு அதிகாரம் உள்ளது என்றார்.

Tags:    

Similar News