இந்தியா

நோய் பாதிப்பு உள்ளவர்கள் பாத யாத்திரையாக வர வேண்டாம்- திருப்பதி தேவஸ்தானம் வலியுறுத்தல்

Published On 2024-10-26 03:52 GMT   |   Update On 2024-10-26 03:52 GMT
  • திருப்பதி மலை கடல் மட்டத்திலிருந்து மிக உயரமாக இருப்பதால் ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும்.
  • திருப்பதிக்கு பாதயாத்திரையாக வர விரும்பும் பக்தர்கள் மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும்.

திருப்பதி:

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உடல் பருமன் உள்ள பக்தர்களும், இதயம் தொடர்பான நோய்கள் உள்ளவர்களும் திருப்பதி மலைக்கு நடந்து செல்வது நல்லதல்ல. திருப்பதி மலை கடல் மட்டத்திலிருந்து மிக உயரமாக இருப்பதால் ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும்.

இதனால் பாதயாத்திரை செல்வது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும், இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் ஆஸ்துமா உள்ளவர்களுக்கு அது மேலும் மோசமாக்கும் என்பதால் பக்தர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தீராத நோய்களால் அவதிப்படும் பக்தர்கள் தங்கள் அன்றாட மருந்துகளை எடுத்துச்செல்வதன் மூலம் சிக்கல்களைத் தவிர்க்கலாம்.

பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் ஏதேனும் பிரச்சனைகளை எதிர்கொண்டால், அலிபிரி மலைப்பாதையில் 1500 படியில் மற்றும் காளி கோபுரம் மற்றும் பாஷ்யகர்லா சன்னதி அருகே மருத்துவ உதவி மையம் உள்ளதால் அங்கு முதலுதவி பெறலாம். திருப்பதியில் உள்ள அஷ்வினி மருத்துவமனை மற்றும் பிற மருத்துவமனைகளில் 24 மணி நேர மருத்துவ வசதி உள்ளது.

நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர காலங்களில் திருப்பதியில் உள்ள சுவிம்ஸ் மருத்துவமனையில் டயாலிசிஸ் வசதி உள்ளதால் அதனை பயன்படுத்தி கொள்ளவும்.

திருப்பதிக்கு பாதயாத்திரையாக வர விரும்பும் பக்தர்கள் மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 64,447 பேர் சாமி தரிசனம் செய்தனர். 25, 555 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ. 3.38 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News