இந்தியா

சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் மக்களுக்கு நீதி கிடைக்கும்- ராகுல் காந்தி

Published On 2024-11-06 04:21 GMT   |   Update On 2024-11-06 04:21 GMT
  • இந்தியாவில் சாதி அமைப்பு மிகவும் வலுவாக உள்ளது.
  • நாடு பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைய வேண்டுமானால் அதனை ஒழிக்க வேண்டும்.

திருப்பதி:

கர்நாடகாவை தொடர்ந்து தெலுங்கானா மாநிலத்தில் இன்று முதல் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஐதராபாத்தில் நடந்தது.

இதில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி, அமைச்சர்கள் சாதி சங்கங்களின் நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

இந்தியாவில் சாதி அமைப்பு மிகவும் வலுவாக உள்ளது. சாதி கொடுமைகள் மேல் சாதியினருக்கு ஒருபோதும் தெரிவதில்லை.

சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வரும் மக்களுக்கு நீதி கிடைக்கும். சாதி அமைப்பு அனைத்து துறைகளிலும் உள்ளது. அரசியல் மற்றும் நீதித்துறையில் அது வலுவாக வேரூன்றியுள்ளது.

சாதி அமைப்பு சிலரது தன்னம்பிக்கையை குலைக்கிறது. இதனால் இளைஞர்கள் கூட முன்னேற முடியாத சூழல் உருவாகி வருகிறது.

உலகில் எங்கும் இல்லாத இந்த சாதி அமைப்பு இந்தியாவில் மட்டுமே உள்ளது. சாதி பாகுபாடுகளால் எவ்வளவு சிரமம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

நாடு பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைய வேண்டுமானால் அதனை ஒழிக்க வேண்டும்.

"அதிகாரத்துவ சாதிக் கணக்கெடுப்பை நாங்கள் விரும்பவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து கேட்கும் கேள்விகளை எங்கோ ஒரு மூலையில் அமர்ந்து முடிவெடுக்கும் சில அதிகாரிகளை நாங்கள் விரும்பவில்லை.

"சாதிக் கணக்கெடுப்பில் என்ன கேள்விகளைக் கேட்க வேண்டும் என்பதை இந்திய மக்கள் கேட்டுத் தீர்மானிக்க வேண்டும்.

இதுபற்றி தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் பெண்கள் முடிவு செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பை உறுதி செய்வதில் முழு உறுதியுடன் இருக்கிறோம். காங்கிரஸ் சார்பில், தேசிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும், நாட்டில் 50 சதவீத இடஒதுக்கீடு என்ற செயற்கைத் தடையை தகர்க்கவும் பாராளுமன்றத்தில் உறுதியளித்துள்ளேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News