இந்தியா (National)

கர்நாடகாவில் திருமணத்திற்கு பெண் கேட்டு இளைஞர் கலெக்டரிடம் மனு

Published On 2024-06-27 05:02 GMT   |   Update On 2024-06-27 05:02 GMT
  • பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
  • நகைச்சுவையாக பேசி அந்த இளைஞரிடம் சில கேள்விகளை கேட்டார்.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள ஒரு திருமண மண்டப த்தில் நேற்று தாலுகா அளவிலான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் நளின் அதுல் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கலெக்டர் மேடையில் இருந்தபடி முகாமில் பங்கேற்ற பொதுமக்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் மனு வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது கனககிரி கவுடா ஓனி பகுதியை சேர்ந்த சங்கப்பா என்ற வாலிபர் முகாமில் கலந்து கொண்டு தனக்கு மணமகள் தேடி தருமாறு கலெக்டர் நளின் அதுலிடம் மனு கொடுத்தார்.

அப்போது அவர் கூறுகையில், `நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். எஸ்.எஸ்.எல்.சி. படித்து விட்டு ஊரில் உள்ள தனியார் கல்லூரியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறேன்.

விவசாய குடும்பத்தில் இருந்து வந்த நான் 10 ஆண்டுகளாக மணமகள் தேடி லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனக்கு பெண் கொடுக்க யாரும் முன்வரவில்லை. இதனால் நான் மனதளவில் கஷ்டப்படுகிறேன். நீங்கள் ஒரு மணப்பெண்ணை கண்டுபிடித்து என் திருமணத்திற்கு உதவுங்கள் என கோரிக்கை வைத்தார்.

இதைக் கேட்டு மேடையில் இருந்த கலெக்டர் நளின் அதுல் மற்றும் அனைத்து அதிகாரிகளும் சிரித்தனர். மனுவை படித்து முடித்த கலெக்டர் நகைச்சுவையாக பேசி அந்த இளைஞரிடம் சில கேள்விகளை கேட்டார். கடைசியில் தாசில்தார் உங்களுக்கு பெண் தேடி தருவார் என கூறி, அந்த இளைஞரை சமாதானப்படுத்தினார்.

Tags:    

Similar News