நாளை 5-ம் கட்ட வாக்குப்பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
- 5-ம் கட்ட தேர்தலில் மொத்தம் 695 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
- ஜூன் 4 வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
புதுடெல்லி:
நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.
அதன்படி, 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19-ந் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26-ந் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ந் தேதி 3-ம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த 13-ந் தேதி 4-ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது. இதனிடையே, 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 49 தொகுதிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) 5-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
உத்தர பிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பிஹாரில் 5, ஒடிசாவில் 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு காஷ்மீரில் 1, லடாக்கில் 1 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளன.
5-ம் கட்ட தேர்தலில் மொத்தம் 695 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் முக்கிய வி.ஜ.பி. வேட்பாளர்களும் அடங்குவர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் 5-ம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 264 பேரும், மிக குறைவாக லடாக்கில் 3 பேரும் மட்டுமே போட்டியிடுகின்றனர்.
மேலும் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், பியூஸ்கோயல், ஸ்மிரிதி இரானி, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா ஆகியோரும் முக்கியமானவர்கள்.
ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார். உத்தர பிரதேசத்தின் அமேதி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கிஷோரி லால் சர்மா போட்டியிடுகிறார்.
உத்தர பிரதேசத்தின் லக்னோ மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இண்டியா கூட்டணி சார்பில் சமாஜ்வாதியை சேர்ந்த ரவிதாஸ் மெஹ்ரோத்ரா போட்டியிடுகிறார்.
பிஹாரின் ஹாஜிபூர் மக்களவைத் தொகுதியில் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இண்டியா கூட்டணி சார்பில் ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த ஷிவ் சந்திர ராம் களத்தில் உள்ளார். பிஹாரின் சரன் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக மூத்த தலைவர் ராஜீவ் பிரதாப் ரூடியை எதிர்த்து ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் லாலுவின் மகன் ரோகிணி ஆச்சார்யா களமிறங்கி உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுடன் ஒடிசா சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு மொத்தம் உள்ள 174 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக கடந்த 13-ந் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. 2-ம் கட்டமாக 35 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தேர்தலை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்த, அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் கடுமையான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. மேலும், கடும் வெப்பத்தை கருத்தில் கொண்டு, வாக்குச்சாவடிகளில் உரிய ஏற்பாடுகளை செய்ய வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன.
வாட்டர் கூலர்கள், மின்விசிறிகள், கூடாரங்கள் போன்றவற்றை பொருத்தி வாக்காளர்களை கடும் வெப்பம் மற்றும் வெயிலில் இருந்து பாதுகாக்க போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. தேர்தல் நடைபெறும் தொகுதிக்கு உட்பட்ட வக்குச்சாவடிகளில் 60 ஆயிரத்துக்கும் க்கும் மேற்பட்ட மத்தியப் படை வீரர்களையும், 30 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
இதை தொடர்ந்து வருகிற 25-ந்தேதி 6-ம் கட்ட தேர்தலும், ஜூன் 1-ந்தேதி 7-ம் கட்ட தேர்தலும் நடைபெறுகின்றன. 7 கட்ட தேர்தல் நிறைவடைந்ததும் ஜூன் 4 வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.