குவிந்து கிடந்த குப்பைகள் - தரையிறங்க முடியாமல் திணறிய எடியூரப்பா ஹெலிகாப்டர்
- கர்நாடகா முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா கலபுரகி நகருக்கு ஹெலிகாப்டரில் சென்றார்.
- அங்கு ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரு:
கர்நாடகாவில் முன்னாள் முதல் மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவரான பி.எஸ்.எடியூரப்பா கலபுரகி நகருக்கு நேற்று ஹெலிகாப்டர் ஒன்றில் வருகை தந்தார். அவரது ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது அப்பகுதியில் குவிந்து கிடந்த பிளாஸ்டிக் ஷீட்டுகள், காகிதங்கள், கவர்கள் உள்ளிட்ட குப்பைகள் காற்றில் பறந்தன. இதனால் அந்தப் பகுதியே தூசு மண்டலம் போன்று காட்சியளித்து, தெளிவற்ற சூழல் காணப்பட்டது. ஹெலிகாப்டர் தரையிறங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டது.
இதையறிந்து கொண்ட பைலட் ஹெலிகாப்டரை தரையிறக்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அதன்பின் அதிகாரிகள் அந்தப் பகுதியை தூய்மை செய்தனர். அதுவரை விமானி வானத்தில் பறந்தபடி இருந்துள்ளார். இதன்பின் ஹெலிகாப்டர் பாதுகாப்பாக தரையிறங்கியது. இதனால் ஆபத்து எதுவும் ஏற்படாமல் எடியூரப்பா உயிர் தப்பினார். இதனால், சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.