திருப்பதியில் புதிய கட்டிடத்திற்கு காணிக்கை பணத்துடன் கிரேன் மூலம் தூக்கி செல்லப்பட்ட உண்டியல்கள்
- உண்டியல் பணம் கிரேன் மூலம் புதிய கட்டிடத்திற்கு கொண்டுவரப்பட்டது.
- உண்டியல் பணம் எண்ணுவதை பக்தர்கள் அறையில் கண்ணாடிக்கு வெளியே இருந்து காணலாம் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று தொடங்கியது.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மாரெட்டி கூறியதாவது:
ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் பணத்தை எண்ணும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை புதிய பரகாமணி கட்டிடத்தில் தொடங்கியது.
புதிய கட்டிடத்தில் அதிநவீன பாதுகாப்புடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சி.சி.டி.வி கேமரா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளதால், நேற்று முதல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கப்பட்டது. உண்டியல் பணம் கிரேன் மூலம் புதிய கட்டிடத்திற்கு கொண்டுவரப்பட்டது.
ஒரு மாதத்திற்கு பின், கோவிலில் உள்ள பரகாமணி மண்டபம், பக்தர்கள் அமர்வதற்கு ஏற்றவாறு அமைக்கப்படும் என்றார்.
முன்னதாக, புதிய பரகாமணி கட்டடத்தில் உள்ள படத்துக்கு வாஸ்து ஹோமம், கோபூஜை, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. உண்டியல் பணம் எண்ணுவதை பக்தர்கள் அறையில் கண்ணாடிக்கு வெளியே இருந்து காணலாம் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதியில் நேற்று 78, 340 பேர் தரிசனம் செய்தனர். 27,063 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.30 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.