இந்தியா (National)

பினராயி விஜயன் சர்ச்சை பேச்சு: தலைமை செயலர்-டி.ஜி.பி.க்கு கேரள கவர்னர் சம்மன்

Published On 2024-10-08 04:47 GMT   |   Update On 2024-10-08 04:57 GMT
  • இன்று மாலை கவர்னரின் முன்பு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
  • கவர்னரின் நடவடிக்கை கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவனந்தபுரம்:

தங்க கடத்தல் மற்றும் ஹவாலா பண பரிவர்த்தனைகள் குறித்து கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்ச்சை கருத்தை வெளியிட்டார்.

அதாவது கேரள மாநிலத்திற்கு மலப்புரம் மாவட்டம் கரிப்பூர் விமான நிலையம் வழியாக அதிகள வில் தங்க கடத்தல் மற்றும் ஹவாலா பண பரிவர்த்தனைகள் அதிகளவில் நடப்பதாகவும், அவை தேச விரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

பினராயி விஜயனின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மலப்புரம் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினரை குறிப்பிட்டு அவர் பேசியி ருப்பதாகவும், அதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.


பினராயி விஜயனின் பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்ததையடுத்து, அவரது பேச்சு தொடர்பாக முதல்-மந்திரி அலுவலகம் விளக்கம் அளித்தது. தேச விரோத நடவடிக்கைகள் என்ற வார்த்தை மலப்புரத்திற்கு குறிப்பாக கூறப்படவில்லை என்று முதல்வர் அலுவலகம் தெளிவுபடுத்தியது.

இருந்தபோதிலும் பினராயி விஜயனின் பேச்சு தொடர்பாக எழுந்த சர்ச்சை முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் இந்த விவகாரத்தில் கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு சில கேள்விகளையும் எழுப்பினார்.

அதாவது தேச விரோத சக்திகளாக யார் தகுதி பெறுகிறார்கள்? இந்த நடவடிக்கைகளின் தன்மைகள் ஏன் விவரிக்கப்படவில்லை? என்பது பற்றியும் விளக்க வேண்டும் என்று முதல்-மந்திரியிடம் விளக்கம் கேட்டார்.

மேலும் இந்த விஷயங்கள் குறித்து முதல்-மந்திரிக்கு எப்போது தெரியவந்தது?, இவற்றின் பின்னணியில உள்ளவர்கள் யார்? தேச விரோத சக்திகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து விரிவான அறிக்கையை வெளியிடுமாறும் கவர்னர் கேட்டுக் கொண்டார்.

இதனால் பினராயி விஜயனின் சர்ச்சை பேச்சு விவகாரத்தில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் முதல்-மந்திரியின் பேச்சு விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க நேரில் ஆஜராகுமாறு கேரள மாநில தலைமை செயலர் சாரதா முரளீதரன், டி.ஜி.பி. ஷேக் தர்வேஷ் ஆகியோருக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் சம்மன் அனுப்பி உள்ளார்.

அவர்கள் இருவரும் இன்று மாலை கவர்னரின் முன்பு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது. கவர்னரின் கேள்விகளுக்கு முதல்-மந்திரியிடமிருந்து திருப்தியான பதில் கிடைக்கவில்லை என்பதால் தலைமை செயலர் மற்றும் டி.ஜி.பி. ஆகிய இருவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

பினராயி விஜயனின் சர்ச்சை பேச்சு விவகாரத்தில் கவர்னரின் இந்த நடவடிக்கை கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News