இந்தியா (National)

ரத்தன் டாடா பற்றிய நினைவுகளை பகிரும் போது கண்ணீர் விட்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

Published On 2024-10-10 10:27 GMT   |   Update On 2024-10-10 10:27 GMT
  • ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.
  • அன்பான விஷயங்கள் தான் ஒரு மனிதனை ரத்தன் டாடாவாக ஆக்குகின்றன

பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

இந்நிலையில், ரத்தன் டாடா பற்றிய நினைவுகளை பகிரும் போது மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கண்ணீர் விட்டார்.

ANI செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த பியூஷ் கோயல், "ஒருநாள் ரத்தன் டாடா எங்க வீட்டிற்கு காலை உணவு அருந்த வந்தார். அப்போது நாங்கள் அவருக்கு சாதாரண இட்லி, சாம்பார், தோசையை மட்டுமே பரிமாறியிருந்தோம். ஆனால் அதற்கே அவர் எங்களை வெகுவாக பாராட்டினார். உலகின் சிறந்த சமையல்காரர்கள் சமைக்கும் உணவை உண்பவர் எங்களின் சாதாரணமான காலை உணவை பாராட்டினார்.

அவர் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் மிகவும் அன்பாக நடந்து கொண்டார். அவருக்கு உணவு பரிமாறிய ஊழியரிடமும் அவர் கனிவாக நடந்து கொண்டார். மிக இனிமையான 2 மணிநேரத்தை நாங்கள் அவரிடம் செலவிட்டோம்.

அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என நாங்கள் கூச்சப்பட்ட போது அவர் என் மனைவியிடம் என்னுடன் அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொள்ள முடியுமா என கேட்டார். இத்தகைய அன்பான விஷயங்கள் தான் ஒரு மனிதனை ரத்தன் டாடாவாக ஆக்குகின்றன. 140 கோடி இந்தியர்கள் மற்றும் உலகமும் அவரை விரும்புகிறது" என்று கூறிவிட்டு அவர் கண்கலங்குகிறார்.

Tags:    

Similar News