ஜார்க்கண்டில் நடந்த விழாவில் 6 வந்தே பாரத் புதிய ரெயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
- கிழக்கு இந்தியாவில் ரெயில் சேவைகள் விரிவாக்கம் செய்யப்படுவதன் மூலம் ஒட்டுமொத்த பிராந்தியமும் வளர்ச்சி அடையும்.
- ரெயில்வே இணைப்பு நெட்வொர்க்கில் 100 சதவீதம் மின்மயமாக்கல் உள்ள மாநிலங்களில் ஜார்கண்ட் ஒன்றாகும்.
ராஞ்சி:
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10 மணிக்கு ஜார்க்கண்ட் மாநிலம் சென்றார். ராஞ்சியில் அவர் 6 புதிய வந்தே பாரத் ரெயில்களை தொடங்கி வைத்தார்.
டாடாநகர்-பாட்னா, பிரம்மபூர்-டாடாநகர், ரூர்கேலா-அவுரா, தியோகர்-வாரணாசி, பாகல்பூர்-அவுரா, கயா-அவுரா ஆகிய 6 புதிய வந்தே பாரத் ரெயில்கள் தொடங்கப்பட்டுள்ளன.
அங்குள்ள டாடாநகரில் இருந்து பிரதமர் மோடி வந்தே பாரத் ரெயில்களை தொடங்கி வைக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் மோசமான வானிலை காரணமாக அவரது ஹெலிகாப்டர் அங்கு செல்ல முடியவில்லை. இதை தொடர்ந்து ராஞ்சியில் இருந்து காணொலி வாயிலாக 6 புதிய வந்தே பாரத் ரெயில்களையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதை தொடர்ந்து மோடி ரூ.660 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் திட்டத்தின் கீழ் 32 ஆயிரம் பயனாளிகளுக்கு அனுப்பி கடிதங்கள் வழங்கினார். மேலும் வீடுகள் கட்டுவதற்கு முதல் தவணையாக ரூ.32 கோடியை விடுவித்தார். இதையடுத்து பிரதமர் மோடி பேசியதாவது:-
6 புதிய வந்தே பாரத் ரெயில்கள், திட்டங்கள் ரூ.650 கோடி, இணைப்பு மற்றும் பயண வசதிகள் விரிவாக்கம், மற்றும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வீடு ஆகிய திட்டங்களுக்காக ஜார்கண்ட் மக்களை நான் வாழ்த்துகிறேன்.
ஜார்கண்ட் வளர்ச்சியில் பின்தங்கி இருந்தது. ஆனால் தற்போது பல திட்டங்களால் இங்கு முன்னேற்றம் காண முடிகிறது. பழங்குடியினர், ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், தலித்துகள் ஆகியோரின் மேம்பாட்டிற்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது.
கிழக்கு இந்தியாவில் ரெயில் சேவைகள் விரிவாக்கம் செய்யப்படுவதன் மூலம் ஒட்டுமொத்த பிராந்தியமும் வளர்ச்சி அடையும். ஜார்கண்ட் மாநிலத்துக்கு ரெயில்வே மேம்பாட்டுக்கான பட்ஜெட் ரூ.7000 கோடி ஆகும். இதை 10 ஆண்டுகளுக்கு முந்தைய பட்ஜெட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இது 16 மடங்கு அதிகம்.
ரெயில்வே இணைப்பு நெட்வொர்க்கில் 100 சதவீதம் மின்மயமாக்கல் உள்ள மாநிலங்களில் ஜார்கண்ட் ஒன்றாகும். 50-க்கும் மேற்பட்ட ரெயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு மோடி பேசினார்.
இதை தொடர்ந்து பிரதமர் மோடி ராஞ்சி விமான நிலையத்தில் இருந்து ஜாம்ஷெட்பூருக்கு சாலை மார்க்கமாக புறப்பட்டார். அங்கு நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.
அவர் நாளை குஜராத் மாநிலத்திற்கும், நாளை மறுநாள் ஒடிசாவுக்கும் சென்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.