இந்தியா

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக எம்.பி.க்களிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி

Published On 2024-12-19 09:13 GMT   |   Update On 2024-12-19 11:58 GMT
  • பாஜக எம்.பி.க்கள் பிரதாப் சந்திர சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத்துக்கு காயம் ஏற்பட்டது.
  • பாஜக எம்.பிக்களை தாக்கியதாக ராகுல் காந்தி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த 17 ஆம் தேதி பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் பேசிய அமித்ஷா, 'அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசினார்.

இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து பாராளுமன்றத்திற்கு வெளியே அம்பேத்கர் புகைப்படங்களை ஏந்தி அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஜெய் பீம் என்று தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அவை நடவடிக்கைகள் நேற்று முழுவதும் முடங்கின.

பின்னர் பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமித் ஷா , பா.ஜ.க. ஒருபோதும் அம்பேத்கரை அவமதிக்காது. * அம்பேத்கரின் கொள்கைகளை பா.ஜ.க. பின்பற்றி வருகிறது. நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கருத்துக்களை திரித்து கூறிய விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. AI மூலம் எனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இந்நிலையில், அமைச்சர் பதவியை அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி அவமதித்ததாக பாஜக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து பாராளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்களுக்கும் எதிர்கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதனால் பாஜக எம்.பி.க்கள் பிரதாப் சந்திர சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத்துக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கி, "நான் படிக்கட்டுக்கு அருகில் நின்று கொண்டிருந்த போது, ராகுல் காந்தி என் பக்கத்தில் வந்து ஒரு எம்.பியை என்மீது தள்ளிவிட்டார். அதனால் தான் நான் கீழே விழுந்து என் மண்டை உடைந்தது" என்று தெரிவித்தார்.

இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாஜக எம்.பி.க்கள் இருவரிடமும் பிரதமர் மோடி தொலைபேசியில் நலம் விசாரித்தார்.

இதனிடையே பாஜக எம்.பிக்களை தாக்கியதாக ராகுல் காந்தி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News