உலகளவில் டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ளது- பிரதமர் மோடி
- உள்நாட்டு விளையாட்டு முதல் ஒலிம்பிக் போட்டி வரை மகளிர் சக்தியை நாடு கண்டது.
- பகவான் ராமர் தன்னுடைய வீட்டிற்கு திரும்பி இருக்கிறார்.
குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி பதிலுரை அளித்தார். பிரதமர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டது.
தொடர்ந்து, பிரதமர் மோடி உரையாற்றியதாவது:-
நாங்கள் திட்டமிட்ட இலக்குகளை 2வது ஆட்சி காலத்தில் நிறைவேற்றினோம். பொரும்பான்மை மக்களின் நம்பிக்கையால் அரசியல் சட்டம் 370வது பிரிவை நீக்கியுள்ளோம்.
வழக்கத்தில் இல்லாத வழக்கொழிந்த பல காலனியாதிக்கச் சட்டங்களை நாங்கள் நீக்கி உள்ளோம்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட குற்றவியல் சட்டங்கள் தண்டனை வழங்குவதையே நோக்கமாக உள்ளது.
உள்நாட்டு விளையாட்டு முதல் ஒலிம்பிக் போட்டி வரை மகளிர் சக்தியை நாடு கண்டது.
நாட்டில் உள்ள கிராமங்கள் தோறும் வளர்ச்சி அடைந்த பாரத யாத்திரை நடைபெற்று வருகிறது.
அரசின் திட்டங்கள் மக்களின் வீடுகளுக்கே சென்று வழங்குவதை அந்த யாத்திரை நோக்கமாக கொண்டுள்ளது.
பகவான் ராமர் தன்னுடைய வீட்டிற்கு திரும்பி இருக்கிறார்.
வரும் தேர்தலில் என்டிஏ கூட்டணிக்கு 400 இடங்களுக்கு மேல் கிடைக்கும். பாஜகவுக்கு மட்டும் 370 இடங்கள் கிடைக்கும். எங்களது மூன்றாவது முறை அரசுக்கான காலமும் வெகு தொலைவில் இல்லை.
ஒட்டு மொத்த நாடு மட்டுமல்ல, கார்கே கூட சொல்கிறார் இந்த முறை மோடி அரசுதான் என்று. எங்களது மூன்றாவது முறை ஆட்சி காலம் மிகப் பெரும் முடிவுகளுக்கான ஆட்சியாக இருக்கும்.
ஏழைகளுக்கு மரியாதை, சலுகை, வேலைகளை கொடுத்துள்ளோம். நாட்டின் அடுத்த ஆயிரம் ஆண்டு கால எதிர்காலத்திற்கு வரும் நாட்டின் அடித்தளம் அமைக்கும்.
மக்களுக்கு நோய் வந்தால் அதற்கு தற்போது இலவச மருத்துவம் கிடைக்கிறது. இந்த நாட்டின் 140 கோடி மக்களின் மீதும் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் ஏறத்தாழ 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனர். சாயையோர வியாபாரிகளுக்கு வங்கி கணக்கில் பணம் வழங்கப்படுகிறது.
இதன்மூலம் வட்டி பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. விஸ்வகர்மா சமுதாயத்தினருக்கு அதற்கான பயிற்சி நிதி உதவி என அனைத்தும் வழங்கப்படுகிறது.
உலகம் முழுவதும் சென்று சிறுதானியங்களை பற்றி நான் தொடர்ந்து பேசி வருகிறேன். ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்ற போது கூட சிறு தானியங்களை பற்றி நான் தொடர்ந்து பேசினேன்.
ஏழைகளின் கவலைகளை போக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஓபிசி மக்களுக்காக பல்வேறு பணிகளை முன்னாள் பீகார் முதல்வர் கர்ப்பூரி தாக்கூர் செய்துள்ளார்.
ஜனநாயகத்திற்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தவர் கர்ப்பூரி தாக்கூர். ஆனால், காங்கிரஸ் அவரை அவமானப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டது.
நாட்டின் அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்கு உள்ளது. கிராமப்புற பொருளாதாரத்தில் பெண்கள் புதிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
இன்று பெண்கள் நமது போர் விமானங்களையும் இயக்குகின்றனர், நாட்டையும் பாதுகாக்கின்றனர். முன்பெல்லாம் பெண் குழந்தைகள் பிறந்ததால், அதற்கு எப்படி செலவு செய்ய போகிறோம் என்ற விவாதம் தான் முதலில் எழும்.
கர்ப்பிணி பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுகிறது. இளைஞர்களிடம் ஒரு புதிய உற்சாகத்தை காண முடிகிறது.
டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தில் உலகில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.