ராகுல் காந்தி இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர் என பிரதமர் மோடி, அமித் ஷா பொய்யை பரப்புகின்றனர்: பிரியங்கா
- பொது வெளியில் என்னுடைய சகோதரர் ராகுல் காந்தி இடஒதுக்கீட்டிற்கு எதிராக இருப்பதாக அவர்கள் பேசி வருகிறார்கள்.
- அவர்கள் பயப்படுகிறார்கள். ஏனென்றால் ராகுல் காந்தி நாடு தழுவிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த விரும்புகிறார்.
மகாராஷ்டிரா மாநிலம் அகில்யாநகர் மாவட்டத்தில் உள்ள ஷீரடியில் பிரியங்கா காந்தி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அவ்போது பிரியங்கா காந்தி பேசும்போது கூறியதாவது:-
மகாராஷ்டிராவை பற்றி நாம் அனைவரும் பெருமைப்படுகிறோம். ஆனால் இந்த நிலத்தில் சத்ரபதி சிவாஜி இழிவுப்படுத்தப்படுகிறார். மக்களாக நீங்கள் இழிவுப்படுத்தப்படுகிறீர்கள். பிரதமர் உள்பட அனைத்து தலைவர்களும் சிவாஜி பெயரை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் அவருக்கு மரியாதை கொடுப்பது இல்லை.
பாராளுமன்றத்திற்கு வெளியே இருந்த சத்ரபதி சிவாஜி சிலை அகற்றப்பட்டது. சிந்துதுர்க் பகுதியில் நிறுவப்பட்ட சிலை இடிந்து விழுந்தது. பழம்பெரும் மன்னர் பெயரை எடுத்துக்கொண்டு அந்த நபரை இழிவுபடுத்த வேண்டுமானால் என்ன பயன்.
பொது வெளியில் என்னுடைய சகோதரர் ராகுல் காந்தி இடஒதுக்கீட்டிற்கு எதிராக இருப்பதாக அவர்கள் பேசி வருகிறார்கள். மணிப்பூரில் இருந்து மும்பைக்கு நியாய யாத்திரை மேற்கொண்டவர், இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர் என்று அவரைப் பற்றி சொல்கிறீர்கள்.
ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நீதி கேட்டும், ஜாதிவாரி கணக்கெடுப்புக்காகவும் பயணம் செய்தார் என்று தெரிந்தும் பொது மேடைகளில் இருந்து பொய் சொல்கிறார்கள்.
அவர்கள் பயப்படுகிறார்கள். ஏனென்றால் ராகுல் காந்தி நாடு தழுவிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த விரும்புகிறார்.
இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.