மோடியின் வாரணாசி தொகுதியில் ரூ.450 கோடியில் கிரிக்கெட் ஸ்டேடியம்
- கஞ்சாரி பகுதியில் ரூ.450 கோடி செலவில் கட்டப்படும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு வருகிற 23-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
- அடிக்கல் நாட்டு விழாவில் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கவாஸ்கர், கபில்தேவ், தெண்டுல்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்கிறார்கள்.
வாரணாசி:
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி ஆன்மீக சிறப்பு பெற்றது. பிரதமர் மோடியின் தொகுதியான இங்கு மற்றொரு சிறப்பு அம்சமாக பிரமாண்டமான கிரிக்கெட் மைதானம் உருவாக உள்ளது.
வாரணாசியில் உள்ள கஞ்சாரி பகுதியில் ரூ.450 கோடி செலவில் கட்டப்படும் இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு வருகிற 23-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
கிட்டத்தட்ட 31 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் இந்த மைதானம் 30 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் கட்டப்பட உள்ளது. டிஸ்ப்ளே ஸ்கோர்போர்டு, பிளட் லைட்கள், கார்ப்பரேட் பாக்ஸ்கள், பயிற்சிப் பகுதிகள், வி.ஐ.பி. ஓய்வறைகள், செய்தியாளர் சந்திப்பு மண்டலம் மற்றும் அலுவலகப் பகுதிகள் என்று அனைத்து வசதிகளுடன் கூடியதாக இந்த மைதானம் அமைய உள்ளது.
இந்த மைதானம் குறித்து உத்தரபிரதேச கிரிக்கெட் சங்க இயக்குநர் யுத்வீர் சிங் கூறுகையில், வருகிற 2025-ம் ஆண்டு முதல் காசி மக்கள் இந்த மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளை பார்க்கலாம் என்றார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உத்தர பிரதேச கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றின் தீவிர பங்கேற்புடன் இந்த மைதானம் அமைய உள்ளது.
அடிக்கல் நாட்டு விழாவில் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கவாஸ்கர், கபில்தேவ், தெண்டுல்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்கிறார்கள். மேலும், நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த மாநில அரசு ரூ.120 கோடி வரையில் செலவு செய்துள்ளது.
இந்த மைதானம் சிவனின் தலையில் சூடியிருக்கும் பிறை போலவும், நுழைவு பகுதி உடுக்கை போன்றும், மின் விளக்கு கம்பங்கள் சூலாயுதம் போலவும் அமைக்கப்பட உள்ளன.