அயோத்தியை உலகத்துடன் இணைப்பதில் எங்கள் அரசு உறுதியாக உள்ளது: பிரதமர் மோடி
- அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது.
- அயோத்தி விமான நிலைய முனைய கட்டிடம் 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டது.
புதுடெல்லி:
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து, அயோத்தியில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் முதல் கட்ட பணிக்கு ரூ.1,450 கோடி செலவானது.
ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் பயணிகளுக்கு சேவை செய்யும் வகையில் விமான நிலைய முனைய கட்டிடம் 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. முனையத்தின் முகப்பு கட்டிடம் அயோத்தி ராமர் கோவில் கட்டிடக் கலையை சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தைக் கடந்த ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இதற்கிடையே, அயோத்தி விமான நிலையத்திற்கு 'மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம், அயோத்தியாதாம்' என பெயரிடும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அயோத்தியை உலகத்துடன் இணைப்பதில் எங்கள் அரசு உறுதியாக உள்ளது. அயோத்தி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவித்து, அதற்கு 'மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம்' என பெயரிடும் திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலும் அளிக்கப்பட்டது என பதிவிட்டுள்ளார்.