ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: ராஞ்சியில் பிரதமர் மோடி வாகனப் பேரணி
- ஜார்க்கண்டில் முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்றுயுடன் முடிகிறது.
- அங்கு சுமார் 5 கி.மீ. தூரம் வாகன பேரணி சென்று பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார்.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு வரும் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
முதல்கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. இதனால் அரசியல் கட்சியினர் அங்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு 3 முறை வருகை தந்துள்ளார். நேற்று மட்டும் இரு இடங்களில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார்.
ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்தில் தேர்தல் பணிகளில் பா.ஜ.க.வினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் 5 கிலோமீட்டர் தூரத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாகனப் பேரணியில் ஈடுபட்டார். வழிநெடுக பா.ஜ.க. தொண்டர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ராஞ்சி, ஹடியா, கன்கோ, ஹிஜ்ரி உள்ளிட்ட 4 சட்டசபை தொகுதிகளில் இந்த ரோடு ஷோ நடைபெற்றது. இதில் மொத்தம் 2 லட்சம் பா.ஜ.க.வினர் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
ராஞ்சி தொகுதியில் போட்டியிடும் சி.பி.சிங் பிரதமர் மோடியுடன் வாகனத்தில் இருந்தார். தொடர்ந்து 6 முறை இந்தத் தொகுதியில் வெற்றி பெற்ற இவர், முன்னாள் மந்திரியாகவும் பதவி வகித்துள்ளார்.