நிர்மலா சீதாராமன் மீது பெங்களூரு திலக் நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு
- கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் பத்திரம் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
- தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக நிர்மலா சீதாராமன் மீது புகார்
தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டிப் பணம் பறித்த புகாரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பெங்களூரு திலக் நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஜனாதிகாரா சங்கர்ஷ பரிஷத் அமைப்பின் துணைத்தலைவர் ஆதர்ஷ் ஐயர் மனுதாக்கல் செய்தார்.
அவரது மனுவில், "நிர்மலா சீதாராமன், ஜெ.பி.நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிமன்றம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா, கர்நாடக முன்னாள் பாஜக தலைவர் நளின் குமார், கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது பெங்களூரு திலக் நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதற்காக மத்திய பா.ஜ.க. அரசு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தைக் கொண்டு வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் பத்திரம் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.