கேரளாவில் ஆள் இல்லா விமானம் மூலம் மாவோயிஸ்டுகளை கண்காணிக்கும் போலீசார்
- தேயிலை தோட்டத்தில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- காடுகளை அடக்கி வரும் ஆன்பீல்ட் கமாண்டோக்களுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக வயநாடு மாவட்ட போலீஸ் அதிகாரி பதம்சிங் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் பல பகுதிகளிலும் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளது. கடந்த மாதம் 28-ந் தேதி கேரள வன வளர்ச்சிக் கழக அலுவலகத்தின் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். இதனை தொடர்ந்து அவர்களின் நடமாட்டத்தை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
இந்நிலையில் மாவோயிஸ்ட் அச்சுறுத்தலில் இருந்து தங்களை பாதுகாக்க வலியுறுத்தி கடந்த 5-ந் தேதி தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சூழலில் வயநாடு மாவட்டம் கம்பமாலா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து கேரள மாநில வடக்க மண்டல ஏ.டி.ஜி.பி. அஜித்குமார், கம்பமாலா சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை கண்காணிக்க ஆளில்லா விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்மூலம் கிடைக்கும் தகவல்களை, காடுகளை அடக்கி வரும் ஆன்பீல்ட் கமாண்டோக்களுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக வயநாடு மாவட்ட போலீஸ் அதிகாரி பதம்சிங் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், தரைமட்டச் சண்டைகள் எதிர்பார்த்த பலனை தரவில்லை. எனவே தமிழகம் மற்றும் கர்நாடகா வில் உள்ள இந்தப் படையுடன் இணைந்து செயல்பட கேரள காவல்துறை திட்டமிட்டுள்ளது என்றார்.