மோடியை எதிர்த்து வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்த பிரபல நகைச்சுவைக் கலைஞர்
- நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக பிரதமர் மோடி 3 வது முறையாக உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார்
- மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் ராஜஸ்தானை சேர்ந்த 28 வயதே ஆகும் பிரபல மிமிக்கிரி நகைச்சுவை கலைஞர் சியாம் ரங்கீலா போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக பிரதமர் மோடி 3 வது முறையாக உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். 7 கட்டமாக நடைபெறும் மக்களவைத் தேர்தலில் கடைசி கட்டமாக வரும் ஜூன் 1 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் அன்றைய தினம் வாரணாசி தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அங்கு தொடங்கியுள்ளது. அதன்படி பிரதமர் மோடி நேற்று (மே 14) ஊர்வலமாக சென்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் ராஜஸ்தானை சேர்ந்த 28 வயதே ஆகும் பிரபல மிமிக்கிரி நகைச்சுவை கலைஞர் சியாம் ரங்கீலா போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்திருந்த்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இவர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் குரல்களில் மிமிக்கிரி செய்து புகழ் பெற்றவர் ஆவார். ஆரம்ப காலகட்டத்தில் 2014 தேர்தல் நடைபெற்ற சமயத்தில் பாஜகவுக்கு ஆதரவாக இருந்து வந்த சியாம் ரங்கீலா அதன்பின்னர் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் கருத்துகளை தனது நிகழ்ச்சிகளிலும் பொது வெளியிலும் பேசத் தொடங்கினார்.
சியாம் ரங்கீலா, கடந்த 2022 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். ஒரு கட்டத்தில் பாஜகவுக்கு எதிரான இவரின் அரசியல் நையாண்டி நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கும் சியாம் ரங்கீலா இன்று அங்கு தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். முன்னதாக மோடிக்கு எதிராக போட்டியிடுவது குறித்து ஷியாம் ரங்கீலா பேசுகையில், எதிர் வேட்பாளர்கள் இல்லாமல் மோடி தேர்தலில் வெற்றிபெற்றுவிடக்கூடாது என்பதற்காகவே வாரணாசியில் அவருக்கு எதிராக போட்டியிடுவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.