சிறப்பு விசாரணைக்குழு முன் மே 31-ந்தேதி ஆஜராவேன்: வீடியோ வெளியிட்ட பிரஜ்வல் ரேவண்ணா
- ஆபாச வீடியோ வெளியானதால் ஜெர்மனி சென்றதாக தகவல் வெளியானது.
- பிர்ஜவலுக்கு எதிராக மத்திய அரசு ஷோகாஸ் நோட்டிஸ் அனுப்பியது.
கர்நாடகா மாநிலம் ஹசன் தொகுதி எம்.பி.யாக இருப்பவர் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் தொடர்பான வீடியோ ஒன்று கடந்த மாதம் வெளியானது. அந்த ஆபாச வீடியோவில் பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. பல பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
இதனால் கர்நாடகா அரசு சிறப்பு விசாரணைக் குழு அமைத்து ஆபாச வீடியோ தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே பிரஜ்வால் ரேவண்ணா ஜெர்மனிக்கு ஓடிவிட்டதாக தகவல் பரவியது.
அவரை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா இரண்டு முறை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
இதனால் கடந்த வாரம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் சிறப்பு விசாரணைக் குழு முன் வருகிற 31-ந்தேதி ஆஜராவேன் என பிரஜ்வால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டி.வி. சேனல் மூலமாக பிரஜ்வல் தெரிவித்த தகவலில் "நான் வருகிற 31-ந்தேதி காலை 10 மணிக்கு சிறப்பு விசாரணைக்குழு முன் ஆஜராவேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். என் மீதான குற்றச்சாட்டுக்கு பதில் அளிப்பேன். நான் நீதிமன்றம் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். பொய் வழக்குகள் என்பது நீதிமன்றம் மூலம் வெளியே வரும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது." என்றார்.
மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிற மூத்த தலைவர்கள் தனது பாலியல் துஷ்பிரயோக வீடியோக்கள் குறித்து பேசினர். இதனால் தான் மன அழுத்தம் அடைந்தேன். மற்றும் தனிமைப்படுத்தப்பட்டேன். இது அரசியல் சதி எனக் குற்றம்சாட்டினார்.
ஆனால் மதசார்பற்ற ஜனதா தளம் அல்லது குடும்பத்தில் உள்ளவர்கள் மூலம் தனிப்பட்ட முறையில் எந்த தகவலும் இது தொடர்பாக தெரிவிக்கவில்லை. ஹசன் தொகுதி தேர்தல் முடிவடைந்து மே 27-ந்தேதி தனது சிறப்பு தூதர பாஸ்போர்ட் மூலமாக ஜெர்மனி சென்றதாக தகவல் வெளியானது.