null
என் X பதிவை மீண்டும் படித்து புரிந்து கொள்ள முடிந்தால்... பவன் கல்யாணிற்கு பிரகாஷ் ராஜ் பதிலடி
- திருப்பதியில் விலங்குகள் கொழுப்பு கலந்த நெய்யில் லட்டுகள் தயாரிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
- சனாதன தர்மத்தின் மீதான தாக்குதல்களுக்கு எதிராக நான் பேசக்கூடாதா என பவன் கல்யாண் ஆதங்கம்
திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் வழங்கப்படும் லட்டுக்கள் தயாரிப்பில் ஜெகன்மோகன் ஆட்சியின் போது மாட்டிறைச்சி கொழுப்பு கலந்த நெய்யைப் பயன்படுத்தியதாக எழுந்துள்ள சர்ச்சை அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் , நாடு முழுவதும் உள்ள இந்து கோவில்களில் இதுபோன்ற பிரச்சனைகளை ஆராய தேசிய அளவில் 'சனாதன தர்ம பாதுகாப்பு[ரக்ஷனா] வாரியம்' என்ற அமைப்பை நிறுவும் நேரம் வந்துவிட்டது என்று தனது எக்ஸ் பக்கத்தில் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் பவன் கல்யாணின் இந்த கருத்துக்கு நடிகரும் அரசியல் வாதியுமான பிரகாஷ்ராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்த விவகாரம் நீங்கள் துணை முதல்வராக உள்ள மாநிலத்தில் நடந்துள்ளது. உரிய முறையில் விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டனை வழங்கும் வழியைப் பாருங்கள்.
அதைவிட்டுவிட்டு ஏன் இந்த பிரச்சனையை தேசிய அளவில் ஊதி பெரிதாக்கி அச்சத்தைப் பரப்புகிறீர்கள். நாட்டில் ஏற்கவே போதுமான அளவு வன்முறைகளும் பதற்றமும் மலிந்துள்ளது [அதற்கு மத்தியில் ஆட்சி புரியும் உங்களின் நண்பர்களுக்கு நன்றி] #justasking என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் பிரகாஷ் ராஜ் கருத்துக்கு பவன் கல்யாண பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "நான் இந்து மதத்தின் புனிதம் மற்றும் உணவுக் கலப்படம் போன்ற பிரச்சனைகளைப் பற்றி பேசுகிறேன், இந்த விஷயங்களைப் பற்றி நான் பேசக்கூடாதா? பிரகாஷ் ராஜ் அவர்களை நான் மதிக்கிறேன், மதச்சார்பின்மை என்று வரும்போது, அது பரஸ்பரமாக இருக்க வேண்டும்.
ஏன் என்னை விமர்சிக்கிறீர்கள் என்று புரியவில்லை. சனாதன தர்மத்தின் மீதான தாக்குதல்களுக்கு எதிராக நான் பேசக்கூடாதா? பிரகாஷ் பாடம் கற்க வேண்டும். திரையுலகினரும் மற்றவர்களும் இந்தப் பிரச்சனையை அலட்சியப்படுத்தக் கூடாது. நான் சனாதன தர்மத்தை தீவிரமாக எடுத்து கொள்பவன்.
பல விமர்சகர்கள் ஐயப்பனையும் சரஸ்வதி தேவியையும் குறிவைத்து வருகின்றனர். சனாதன தர்மம் மிகவும் முக்கியமானது. இந்த விஷயத்தில் ஒவ்வொரு இந்துவும் பொறுப்பேற்க வேண்டும். மற்ற மதங்களிலும் இதுபோன்ற பிரச்சனைகள் எழுந்தால், பரவலான போராட்டம் நடக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பவன் கல்யாணிற்கு பதில் அளிக்கும் விதமாக வீடியோ ஒன்றை பிரகாஷ் ராஜ் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "பவன் கல்யாண் அவர்களின் செய்தியாளர் சந்திப்பை பார்த்தேன். நான் சொன்னதை நீங்கள் தவறாக புரிந்து கொண்டது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. நான் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருக்கிறேன், திரும்ப வந்து உங்களுக்கு பதிலளிக்கிறேன். அதற்குள் மீண்டும் என் எக்ஸ் பதிவை ஒருமுறை நீங்கள் படித்து பார்த்து புரிந்து கொள்ள முடிந்தால் உங்களை நான் பாராட்டுவேன்" என்று பேசியுள்ளார்.