இந்தியா

பா.ஜனதா கடந்த தேர்தலை விட அதிக இடங்களை பிடிக்கும்: பிரசாந்த் கிஷோர் சொல்கிறார்

Published On 2024-05-21 09:01 GMT   |   Update On 2024-05-21 09:01 GMT
  • ஆட்சிக்கு எதிராக, தலைவர்களுக்கு எதிராக எதிர்ப்பு இருந்தால் மக்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களித்து மாற்றத்தை எதிர்பார்ப்பார்கள்.
  • ஆனால், நாடு தழுவிய அளவில் அரசுக்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும் நாம் மக்களின் கோபத்தை கேட்கவில்லை.

தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுக்கும் அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் இன்று தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டிக் கொடுத்தார். அப்போது மக்களவை தேர்தலில் யாருக்கு வெற்றி என்பது குறித்து தனது பார்வையை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில் "ஜூன் 4-ந்தேதி முடிவு என்னதாக இருக்கும் என்பதை எதிர்காலம் காட்டும். ஆனால் பத்திரிகையாளரக்ள், நிபுணர்கள் போன்றோர் தங்களது கருத்துகளை கொண்டுள்ளனர். என்னைப் பொறுத்த வரையில், நிலைத்தன்மை (தொடர்ந்து விசயத்தை கூறுவது) சில சமயங்களில் சலிப்பை ஏற்படுத்தலாம் என்று கூறுவேன்.

கடந்த ஐந்து மாதங்களாக நீங்கள் தேர்தலை எப்படி மதிப்பீடு செய்கிறீர்கள் என்பது விசயம் இல்லை. பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கூறி வருகிறேன். கடந்த தேர்தலில் பிடித்த அதே இடங்களை பிடிக்கும் அல்லது கூடுதலாக சில இடங்களை பிடிக்கும்.

அடிப்படையை நாம் பார்க்க வேண்டும். ஆட்சிக்கு எதிராக, தலைவர்களுக்கு எதிராக எதிர்ப்பு இருந்தால், மக்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களித்து மாற்றத்தை எதிர்பார்ப்பார்கள். ஆனால், நாடு தழுவிய அளவில் அரசுக்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும் நாம் மக்களின் கோபத்தை கேட்கவில்லை. ஏமாற்றங்கள், ஆசைகள் நிறைவேறாமல் இருந்திருக்கலாம். ஆனால் நாடு தழுவிய கோபத்தை கேட்கவில்லை.

இந்த நபர் ஆட்சிக்கு வந்தால் நம்முடைய நிலை முன்னேற்றம் அடையும் என மக்கள் உணர்வதாக வைத்துக் கொண்டால் ராகுல் காந்தி வந்தால் சிறப்பாக இருக்கும் என்று நாம் எங்கேயும் கேட்க முடியவில்லை. அவருடைய ஆதரவாளர்கள் சொல்லலாம். நான் நாடு தழுவிய அளவில் பேசிக் கொண்டிருக்கிறேன்.

பதவியில் இருப்பவருக்கு எதிராக பரவலான கோபமோ அல்லது சவாலாக இருக்கும் எதிர்ப்பு குரலோ இல்லை. அதனால் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் இருக்காது என்று நினைக்கிறேன்.

கிழக்கு மற்றும் தெற்கில் சுமார் 225 இடங்கள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் இங்கு பா.ஜனதா மிகப்பெரிய அளவில் சோபிக்கவில்லை. 50-க்கும் குறைவான இடங்களைத்தான் தற்போது வைத்துள்ளது. அவர்கள் தோல்வியடைந்தால், அவர்கள் வடக்கு மற்றும் மேற்கில் சறுக்கியிருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டியது அவசியம். என்னுடைய மதிப்பிட்டின்படி அப்படி இல்லை. ஆனுால், கிழக்கு மற்றும் தெற்கில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும்.

இவ்வாறு பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News