கட்டுமான பணி கால்வாயில் விழுந்த கர்ப்பிணி
- கடையின் முன்புள்ள கால்வாயில் பராமரிப்பு பணி நடந்து வந்துள்ளது.
- அக்கம் பக்கத்தினரும் விரைந்து செயல்பட்டு கர்ப்பிணி பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
திருவனந்தபுரம்:
நவீன காலமான தற்போது எந்த ஒரு செயலும் சமூகவலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறது. அப்படி ஒரு வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
கர்ப்பிணி பெண் ஒருவர், கட்டுமான பணி நடைபெறும் கால்வாயில் தவறி விழுவது தான் அது. இந்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர், தனது கணவருடன் மண்ணஞ்சேரி இந்திரா சந்திப்பு-திருவேணி சாலையில் உள்ள துணிக்கடைக்கு சென்றுள்ளார்.
அந்தக் கடையின் முன்புள்ள கால்வாயில் பராமரிப்பு பணி நடந்து வந்துள்ளது. இதற்காக கால்வாயின் மேல் பகுதியில் தற்காலிகமாக மரப்பலகை போடப்பட்டு இருந்தது. அதனை கணவர் தாண்டிச் சென்று விட, கர்ப்பிணி பெண் மரப்பலகையில் கால் வைத்து செல்ல முயன்றார்.
அப்போது தான் எதிர்பாராதவிதமாக அந்தப் பலகை உடைந்து கர்ப்பிணி பெண் கால்வாய்க்குள் விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்ணின் கணவரும், அக்கம் பக்கத்தினரும் விரைந்து செயல்பட்டு கர்ப்பிணி பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் அந்த பெண்ணுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. கால்வாயின் மறுபகுதியில் இரும்பு கம்பிகள் உள்ளன. அதில் விழுந்து இருந்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் என்று பலரும் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் இதுபோன்ற விபத்துக்கள் இந்த பகுதியில் அடிக்கடி நடப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கர்ப்பிணி பெண் கால்வாயில் விழுந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த கேரள மந்திரி முகமது ரியாஸ் உத்தரவிட்டுள்ளார்.