பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பே நாகரீக சமுதாயத்தின் அடையாளம்- குடியரசுத் தலைவர் பேச்சு
- வடகிழக்கு மாநிலங்களில் சாலை மற்றும் ரயில் இணைப்பில் மத்திய அரசு சிறப்பு கவனம்.
- இது வர்த்தகம் மற்றும் சுற்றுலா வாய்ப்புகளை அதிகரிக்கும்.
கவுகாத்தி:
அசாம் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, கவுகாத்தியில் உள்ள சங்கர்தேவ் கலாசேத்ரா அரங்கில் இருந்து காணொலி மூலம் மாநில மற்றும் மத்திய அரசுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நிறைவடைந்த திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் கூறியுள்ளதாவது: எந்தவொரு மாநிலத்தின் வளர்ச்சிக்கும் சிறந்த உள்கட்டமைப்புதான் அடிப்படை.இன்று தொடங்கப்பட்டுள்ள சுகாதாரம், கல்வி, ரயில்வே, சாலை, பெட்ரோலியம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தினால், அசாம் உட்பட வடகிழக்கு பிராந்தியம் முழுவதும் வணிகம், வேலை வாய்ப்புகள், போக்குவரத்து வசதிகள் அதிகரிக்கும், இதனால் பொருளாதாரம் வலுவடையும்.
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் உள்கட்டமைப்பு, சாலை, ரயில் இணைப்பு மற்றும் தகவல் தொடர்பு இணைப்பு ஆகியவற்றில் மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது இப்பகுதியில் வர்த்தகம் மற்றும் போக்குவரத்தை மேம்படுத்துவதுடன் சுற்றுலா வாய்ப்புகளை அதிகரிக்கும்.
அசாம் மாநில வளர்ச்சி, முழு வடகிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும். இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் அசாம் 13 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. நாட்டின் மொத்த இயற்கை எரிவாயு உற்பத்தியில் 15 சதவீதம் வடகிழக்கு பிராந்தியத்தில் இருந்து கிடைக்கிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பே நாகரீக சமுதாயத்தின் அடையாளம். அசாமில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சேவைகளை வலுப்படுத்த 3000 மாதிரி அங்கன்வாடி மையங்கள் தொடங்கப்பட்டது பாராட்டுக்குரிய முயற்சி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.