இந்தியா

மதுராந்தகம் விபத்தில் 6 பேர் பலி- பிரதமர் மோடி இரங்கல்

Published On 2022-07-08 09:44 GMT   |   Update On 2022-07-08 10:56 GMT
  • எனது எண்ணங்கள் அன்புக்குரியர்களை இழந்தவர்களின் குடும்பத்தோடு உள்ளது.
  • காயம் அடைந்துள்ளவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்

புதுடெல்லி:

சென்னை கோயம்பேட்டில் இருந்து சிதம்பரம் நோக்கி இன்று காலை அரசு பஸ் (எண் 14) புறப்பட்டு சென்றது. சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

காலை 8.10 மணியளவில் அச்சரப்பாக்கம் அடுத்த தொழப்பேடு அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டு இருந்தது.

அப்போது முன்னால் இரும்பு கம்பியை ஏற்றிக் கொண்டு திருச்சி நோக்கி லாரி ஒன்று சென்றது. அந்த லாரியை அரசு பஸ் டிரைவர் முந்தி செல்ல முயன்றார்.

இதில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் இடது புறத்தில் இருந்த லாரியின் பின்பக்கத்தில் அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் பஸ்சின் இடதுபுறம் முழுவதும் நொறுங்கியது.

இடதுபுற இருக்கைகளில் ஜன்னல் ஓரம் இருந்த 3 ஆண்கள், 2 பெண்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயம் அடைந்தனர்.

தகவல் அறிந்ததும் அச்சரப்பாக்கம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர் பலியான 5 பேரின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதில், மேல் மருவத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மற்றொரு ஆண் பயணியும் பரிதாபமாக இறந்தார்.

இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. மேலும் சிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில், விபத்து குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "செங்கல்பட்டு அருகே நடந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது.

எனது எண்ணங்கள் அன்புக்குரியர்களை இழந்தவர்களின் குடும்பத்தோடு உள்ளது. காயம் அடைந்துள்ளவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News