10 ஆண்டுகள்... செய்தியாளர்களையே சந்திக்காத பிரதமர் மோடி
- இந்திய பிரதமர்கள் கடைசியாக செய்தியாளர்களை சந்தித்து 10 வருடம் ஆனதாக தகவல்
- பாஜக ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்திக்காதது ஏன் என கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.
கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பாஜக பெரும்பாலான இடங்களை கைப்பற்றி ஆட்சியமைத்தது. அதனைத் தொடர்ந்து 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவே மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இது காங்கிரஸ்-க்கு பெரிய அடியாக இருந்தது. இதன் தொடர்ச்சியாக 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில்இந்திய பிரதமர்கள் கடைசியாக செய்தியாளர்களை சந்தித்து 10 வருடம் ஆனதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-ன் தகவல் தொடர்பு ஆலோசகர் பன்கஜ் பக்சோரி தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில் "இந்தியப் பிரதமர் கடைசியாக செய்தியாளர்களை சந்தித்து இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகின்றன. 2012ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி, 100க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களுடன், 62 திட்டமிடப்படாத கேள்விகளுக்கு அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் பதிலளித்திருந்ததாக பதிவிட்டிருந்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங்க் பதில் அளித்தும், அவர் அமைதி காத்ததாக பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சித்திருந்தன.
இந்நிலையில் பாஜக பதவியேற்று 10 ஆண்டுகள் ஆன நிலையில் இந்தியாவில் இதுவரை பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்திக்காதது தற்போது பேசு பொருளாகியுள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன், பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அதில் இரண்டு கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், ஒரு கேள்விக்கு மட்டுமே பதில் அளித்திருந்தார்.
உங்கள் நாட்டில் உள்ள முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் உரிமைகளை மேம்படுத்தவும், பேச்சுரிமையை நிலைநாட்டவும் நீங்களும் உங்கள் அரசும் என்ன நடவடிக்கையை எடுக்க விரும்புகிறீர்கள்?" என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு சாதி, மத அடிப்படையில், இந்தியாவின் ஜனநாயக கொள்கையில் எந்த பாகுபாடும் காட்டப்படுவதில்லை என பதிலளித்திருந்தார் மோடி. அரசை விமர்சிப்பவர்களை வாய் திறக்காமல் செய்வதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவிப்பதாக கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கவில்லை. இச்சம்பவம் அப்போது பேசுபொருளாகி விவாதத்தை ஏற்படுத்தியது.
உலக நாடுகளின் அதிபர்கள் மற்றும் பிரதமர்கள் அவ்வப்போது செய்தியாளர்களை சந்திப்பது உண்டு. 2004 முதல் 2014-ம் ஆண்டு வரை பிரதமராக இருந்த மன்மோகன் சிங் 117 முறை செய்தியாளர்களை சந்தித்தார். ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்திக்காதது ஏன் என கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.