இந்தியா

திருப்பதியில் கருட சேவையின் போது தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை

Published On 2024-10-01 05:27 GMT   |   Update On 2024-10-01 05:27 GMT
  • வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 4-ந் தேதி தொடங்குகிறது.
  • தனியார் வாகனங்கள் திருப்பதி மலைக்குச் செல்ல தடை.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 4-ந் தேதி தொடங்குகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை வருகிற 8-ந் தேதி நடைபெற உள்ளது. கருட சேவை தரிசனத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே பக்தர்களின் சிரமத்தை போக்குவதற்காக கருட சேவை நாளன்று தனியார் வாகனங்கள் திருப்பதி மலைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் முன்கூட்டியே பக்தர்கள் தங்களது வாகனங்களை எந்த எந்த பகுதியில் நிறுத்தலாம் என்பது குறித்து அறிவதற்காக கியூ.ஆர் குறியீடு பொருத்தப்பட்ட பலகைகளை ஆங்காங்கே வைத்து உள்ளனர்.

அதன்படி அலிபிரி பாரத வித்யா பவன், நேரு மாநகராட்சி பள்ளி மைதானம், விநாயகா நகர் குடியிருப்பு, எஸ்.வி வைத்திய கல்லூரி மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். சுற்றுலா பஸ்கள் உயிரியில் பூங்கா சாலையில் உள்ள தேவ லோக் மைதான த்திலும், பைக்குகள் பாலாஜி இணைப்பு பஸ் நிலையத்திலும் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பக்தர்கள் வாகனங்களை நிறுத்தும் இடங்களை அறிவதற்காக ரூயா, கருடா, கூடலி, பாலாஜி லிங்க் பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கியூ.ஆர் குறியீடு பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.


கியூ.ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்தால் வாகனம் நிறுத்துமிடங்கள் மற்றும் அவற்றை சென்றடையும் வழிகள் பற்றிய விவரங்கள் கொண்டவை கியூ.ஆர் குறியீட்டில் உள்ளது.

பக்தர்கள் கியூ.ஆர் குறியீட்டை பயன்படுத்தி வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்திக் கொள்ளலாம் என தேவஸ்தான அதிகாரிகள் பக்தர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News