தேர்தலின்போது பொழுதுபோக்கிற்காக வருகிறார்: பிரியங்காவுக்கு சிவராஜ் சிங் சவுகான் பதிலடி
- மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பெரிய நடிகர். அவர் அமிதாப்பை மிஞ்சி விடுவார்- பிரியங்கா
- பிரியங்கா காந்தி தேர்தலை பெரிதாக கொள்ளவில்லை. தேர்தல், மக்கள், ஜனநாயகத்தை பொழுதுபோக்கு போன்று கருதுகிறார்- சவுகான்
மத்திய பிரதேச மாநிலத்தில் 230 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
பா.ஜனதா- காங்கிரஸ் கட்சி தலைவர்கள் போட்டி பிரசாரம் மேற்கொண்டனர். காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி பிரசாரத்தின்போது, "மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பெரிய நடிகர். அவர் அமிதாப்பை மிஞ்சி விடுவார். பிரதமர் மோடி எதிர்க்கட்சி தலைவர்கள் அவதூறாக பேசுவதாக அழுது கொண்டிருக்கிறார். அவரை வைத்து மேரே நாம் படத்தை எடுக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் சிவராஜ் சவுகான், பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில் "பிரியங்கா காந்தி தேர்தலை பெரிதாக கொள்ளவில்லை. தேர்தல், மக்கள், ஜனநாயகத்தை பொழுதுபோக்கு போன்று கருதுகிறார். அதனால்தான் பொழுதுபோக்கிற்காக இங்கு வந்தார். இது அவளுடைய மோசமான சிந்தனையின் பிரதிபலிப்பு.
மாநிலத்தில் உள்ள தீவிர பிரச்சினைகள் குறித்து பேசுங்கள். முதல்வர் படத்தில் நடிப்பது குறித்த விவகாரத்தை வைத்து தேர்தலில் போட்டியிட முடியுமா?. நடிப்பது, மோடியை வைத்து படம் எடுக்கலாம் குறித்து பேசுவது அரசியல் பிரச்சினையா? என்று அவரிடம் கேட்க விரும்புகிறேன். அவர் தேர்தலை கேலி செய்கிறார். இது ஜனநாயகத்திற்கும், மக்களுக்கும் அவமரியாதை'' என்றார்.