இந்தியா

வயநாட்டில் பிரியங்கா காந்தி தீவிர பிரசாரம்

Published On 2024-11-05 05:37 GMT   |   Update On 2024-11-05 05:37 GMT
  • வருகிற 13-ந்தேதி இடைத்தேர்தல்.
  • மொத்தம் 16 பேர் போட்டியிடுகிறார்கள்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் ஏப்ரல் மாதம் நடந்த மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் அவர் ரேபரேலி தொகுதியிலும் வெற்றி பெற்றதால், அவர் ரேபரேலி தொகுதி எம்.பி.யாகவே பதவியேற்றார்.

அவர் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததால், அந்த தொகுதி காலியானது. வயநாடு மக்களவை தொகுதிக்கு வருகிற 13-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் நவ்யா ஹரிதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் மொகேரி ஆகியோர் போட்டியிடுகின்றனர். வயநாடு தொகுதியில் இவர்களுடன் சேர்த்து மொத்தம் 16 பேர் போட்டியிடுகிறார்கள். தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே இருப்பதால் அனைவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரியங்கா காந்தியை பொருத்தவரை வேட்புமனு தாக்கல் செய்த கடந்தமாதம் 23-ந்தேதி தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அவருக்கு ஆதரவாக ராகுல் காந்தியும் பிரசாரம் செய்தார். அதன் பிறகு அவர்கள் இருவரும் டெல்லிக்கு திரும்பிச் சென்றனர்.

இந்தநிலையில் பிரியங்கா காந்தி இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்துக்காக கடந்த 3-ந்தேதி கேரளா வந்தார். அவர் தனது சகோதரரான ராகுல்காந்தியுடன் 3 மற்றும் 4-ந்தேதிகளில் வயநாடு தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர்கள் இருவரும் பல்வேறு பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார்கள்.

2 நாட்கள் பிரசாரத்தை முடித்துக்கொண்டு ராகுல்காந்தி டெல்லி திரும்பிய நிலையில், வயநாட்டில் பிரியங்கா காந்தி தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறார். அவர் திறந்தவெளி வாகனத்தில் சென்றபடியும், பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பேசியும் ஆதரவு திரட்டி வருகிறார்.

மேலும் பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் உள்ள கல்லூரிகளுக்கு சென்று மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடி வருகிறார். அவர் பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் மக்களோடு மக்களாக இருந்து சகஜமாக பேசுவது அனைவரையும் கவரும் வகையில் உள்ளது.

தேர்தல் பிரசாரம் முடிய இன்னும் 6 நாட்களே இருக்கும் நிலையில், பிரியங்கா காந்தி தனது பிரசாரத்தை நாளை மறுநாளுடன் முடித்துக் கொள்கிறார்.

அவர் இன்று கோழிக்கோடு திருவம்பாடி, மலப்புரத்தில் உள்ள வண்டூர், ஏர்நாடு, நிலம்பூர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

அவர் நாளை இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அதன்பிறகு மீதமுள்ள நாட்களில் அவருக்கு ஆதரவாக கட்சியின் நிர்வாகிகள் தொகுதி முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

Tags:    

Similar News