போலி வீடியோவை பகிர்ந்த பிரியங்காகாந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்-பா.ஜனதா வலியுறுத்தல்
- கருணை மதிப்பெண்ணை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
- விடைத்தாள் கிழிந்தது என்ற ஆயுஷின் கூற்றுகள் பொய்யாகி விட்டது.
புதுடெல்லி:
நீட்தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகார்கள் எழுந்தன. இதனால் நீட் தேர்வை ரத்து செய்து விட்டு மீண்டும் புதிதாக தேர்வு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
நீட்தேர்வு தொடங்கு வதற்கு முன்பே பீகார் மாநில மையத்தில் இருந்து வினாத் தாள் வெளியாகி முறைகேடு நடந்ததாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீட் தேர்வில் 1,563 பேருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்ணை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
சிறிய அலட்சியத்துக்கும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே நீட் தேர்வு எழுதிய ஆயுஷி படேல் என்பவர் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் தனது விடைத்தாள் கிழிந்து இருந்தது. இதனால் தேசிய தேர்வு முகாமை தனது முடிவை அறிவிக்கத் தவறியது. இதனால் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வை நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனுவை அலகாபாத் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. அவர் தாக்கல் செய்த ஆவணங்கள் போலி யானது. ஆயுஷி படேல் மீது தேசிய தேர்வு முகமை சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உத்தரவிட்டது.
முன்னதாக ஆயுஷி படேல் வைரலான வீடி யோவை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பகிர்ந்து இருந்தார். அதோடு தேர்வு முடிவுகளில் முரண்பாடு இருப்பதாக ஆயுஷி படேல் கூறியதையும் பிரியங்கா ஆதரித்தார். முறைகேடு தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தற்போது ஆயுஷி படேல் தாக்கல் செய்தது போலி ஆவணங்கள் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து பிரியங்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ஷெகாத் புனவல்லா கூறியதாவது:-
பிரியங்காவும், காங்கிரசும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் போலித்தனத்தை பயன்படுத்துகிறார்கள். அவர் வெளியிட்ட ஆயுஷி படேல் வீடியோ போலியானது. விடைத்தாள் கிழிந்தது என்ற ஆயுஷின் கூற்றுகள் பொய்யாகி விட்டது. இதனால் பிரியங்காகாந்தி கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.