பிரியங்கா, சச்சின் அவமதிக்கப்படுகிறார்கள் - நீக்கப்பட்ட தலைவர் குமுறல்
- நரேந்திர மோடியை சந்தித்து அழைப்பு விடுத்தார் கிருஷ்ணம்
- எது கட்சி விரோத நடவடிக்கை என கிருஷ்ணம் கேட்கிறார்
உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை குழுவில் உறுப்பினராக இருந்தவர், ஆசார்ய பிரமோத் கிருஷ்ணம் (Acharya Pramod Krishnam).
பீகார் மாநிலத்தை சேர்ந்த 59 வயதான கிருஷ்ணம், ஸ்ரீ கல்கி தாம் எனும் ஆன்மிக அமைப்பை நடத்தி வருபவர்.
கிருஷ்ணம், காங்கிரஸ் கட்சியின் சார்பாக 2014 மக்களவை தேர்தலில் உத்தர பிரதேச சம்பால் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் லக்னோ தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
சில தினங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த கிருஷ்ணம், பிப்ரவரி 19 அன்று நடைபெறும் ஸ்ரீ கல்கி தாம் அமைப்பின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
இதனையடுத்து, நேற்று காங்கிரஸ் தலைமை, கட்சி நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்பட்டதற்காக அவரை கட்சியை விட்டு நீக்கியுள்ளது.
இது குறித்து கிருஷ்ணம் தெரிவித்ததாவது:
பிரியங்கா காந்தி கட்சியில் அவமதிக்கப்படுகிறார். ராகுல் காந்தியின் யாத்திரையில் பிரியங்கா ஏன் பங்கேற்கவில்லை? காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக அவரை நியமித்தாலும் அவருக்கு பொறுப்பு ஏதும் வழங்கப்படவில்லை.
இது காங்கிரஸ் கட்சியின் வரலாற்றிலேயே நடந்ததில்லை.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் (மல்லிகார்ஜுன் கார்கே) வெறும் ரப்பர் ஸ்டாம்ப். பிரியங்காவை அவமானப்படுத்த யார் உத்தரவிடுகிறார்கள்?
கட்சியில் சச்சின் பைலட்டிற்கும் இதே நிலைதான். அவர் ஆலகால விஷத்தை உண்ட பரமசிவன் நிலையில் உள்ளார்.
என்னை கட்சியை விட்டு நீக்கிய காங்கிரசுக்கு நன்றி.
காங்கிரசின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் கேசி வேணுகோபால் ஆகியோர் எது கட்சி-விரோத நடவடிக்கை என தெளிவுபடுத்த வேண்டும்: அயோத்தி கும்பாபிஷேகத்திற்கு செல்வதா அல்லது சனாதன தர்மத்தை மலேரியாவுடன் ஒப்பிட்டதை கண்டிக்க தவறியதையா?
இவ்வாறு ஆசார்ய கிருஷ்ணம் தெரிவித்தார்.