200 யூனிட் இலவச மின்சாரத்திற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: கர்நாடக அரசு
- சேவா சிந்து செல்போன் செயலி மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
- பெங்களூரு ஒன், கிராம ஒன் உள்ளிட்ட மையங்களில் விண்ணப்பிக்கலாம்.
பெங்களூரு
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து வீடுகளுக்கு 200 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்திருந்தார். இந்த 200 யூனிட் இலவச மின்சாரத்தை பெறுவதற்கு சில கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. மேலும் வாடகை வீடுகளில் வசிப்பவருக்கும், புதிதாக வீடு கட்டுபவருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் 200 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோர் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு கடந்த 15-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. சில தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக தள்ளிவைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இன்று முதல் 200 யூனிட் இலவச மின்சாரம் பெற தகுதியானவர்கள் சேவா சிந்து செல்போன் செயலி மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் பெங்களூரு ஒன், கிராம ஒன் உள்ளிட்ட மையங்களில் விண்ணப்பிக்கலாம் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் தங்களது மின் கட்டண தகவல் விபரம் மற்றும் வாடகை வீட்டில் இருப்பதற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.