இந்தியா

ராகுல் காந்தியின் பாதயாத்திரை மவுன புரட்சியை ஏற்படுத்துகிறது: மல்லிகார்ஜூன கார்கே

Published On 2022-11-03 02:40 GMT   |   Update On 2022-11-03 02:40 GMT
  • ராகுல் காந்தியின் பாதயாத்திரை ஒட்டுமொத்த அரசியல் சூழலையே மாற்றியமைக்கும்.
  • ராகுல் காந்தி தொடங்கியுள்ள பாதயாத்திரை தெலுங்கானாவில் தற்போது நடந்து வருகிறது.

ஐதராபாத்

இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கியுள்ள பாதயாத்திரை தெலுங்கானாவில் தற்போது நடந்து வருகிறது. இதில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் அவருடன் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் 7-ந் தேதி தொடங்கிய இந்த பாதயாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களை கடந்து சென்ற வாரம் தெலுங்கானாவில் நுழைந்துள்ளது.

யாத்திரையின் 56-வது நாளான நேற்று ஐதராபாத் நகரின் பாலநாகர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த யாத்திரை தொடர்ந்தது. ஹபீஸ்பேட்டில் காலை இடைவேளையும், முதாங்கியில் மாலை இடைவேளையும் விடப்பட்டது.

பாதயாத்திரை சென்றவர்கள் கவுலம்பேட்டில் இரவில் ஓய்வெடுத்தனர்.

முன்னதாக இந்த பாதயாத்திரையில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பங்கேற்கும் யாத்ரீகர்களை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று போவன்பள்ளியில் சந்தித்து உரையாடினார்.

பின்னர் இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருந்ததாவது:-

இந்திய ஒற்றுமை பயணத்தில் ஈடுபட்டுள்ள யாத்ரீகர்களை ஐதராபாத்தின் போவன்பள்ளியில் சந்தித்து பேசினேன். ராகுல் காந்தியுடன் 3,500 கி.மீ. நடந்து செல்லும் அவர்கள் நமது கட்சி தொண்டர்களுக்கு உத்வேகம் அளிக்கின்றனர்.

இந்திய ஒற்றுமை பயணம் ஒரு மவுன புரட்சியை ஏற்படுத்துகிறது. இது ஒட்டுமொத்த அரசியல் சூழலையே மாற்றியமைக்கும்.

இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

Tags:    

Similar News