இந்தியா

வயநாடு தொகுதி மக்களின் தேவைகளை ராகுல்காந்தி பூர்த்தி செய்யவில்லை- நவ்யா ஹரிதாஸ்

Published On 2024-10-20 04:39 GMT   |   Update On 2024-10-20 04:39 GMT
  • பிரியங்கா காந்தி வருகிற 23-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.
  • நவ்யா ஹரிதாஸ் கோழிக்கோடு மாநகராட்சியில் பா.ஜ.க. தலைவராக உள்ளார்.

திருவனந்தபுரம்:

கடந்த பாராளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப்பிர தேச மாநிலம் ரேபரேலியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல்காந்தி, வய நாடு தொகுதி எம்.பி. பதவி யை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து அந்த தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது.

அடுத்த மாதம் (நவம்பர்) 13-ந் தேதி அங்கு வாக்குப் பதிவு நடக்கிறது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் வருகிற 23-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

மனு தாக்கலுக்கு முன்னதாக அன்றைய தினம் அவர், தனது சகோதரரும், நாடாளு மன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தியுடன் வயநாட்டில் ரோடுஷோவில் பங்கேற்கிறார்.

காங்கிரஸ் கட்சி தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டிய நிலையில், பா.ஜ.க சார்பில் களம் இறங்கப் போவது யார்? என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது.

இந்த நிலையில் வயநாடு தொகுதி வேட்பாளராக கட்சியின் மாநில மகளிர் அணி தலைவர் நவ்யா ஹரிதாசை, பா.ஜ.க. அறிவித்துள்ளது.

வயநாடு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நவ்யா ஹரிதாஸ், தற்போது கோழிக்கோடு மாநகராட்சியில் பா.ஜ.க. தலைவராக உள்ளார்.

2 முறை இந்த மாநகராட்சியில் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட அவர், கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கோழிக்கோடு தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் அகமது தேவர்கோவிலிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். தற்போது அவர் மீண்டும் தேர்தல் களம் இறங்க உள்ளார்.


36 வயதான நவ்யா ஹரிதாஸ், பி.டெக் என்ஜினீயர் ஆவார். பா.ஜ.க.வில் வளர்ந்து வரும் பெண் தலைவராக கருதப்படும் இவர், கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று கட்சியினரிடம் நன்மதிப்பை பெற்றுள்ளார்.

வேட்பாளராக அறிவிக்கப் பட்ட நவ்யா ஹரிதாஸ் கூறுகையில், வயநாட்டில் உள்ள மக்களுக்கு சில முன்னேற்றம் தேவை. ராகுல்காந்தி வயநாட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வில்லை.

வயநாடு மக்களுக்கு அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் தேவை. உள்ளூர் நிர்வாகத்தின் பின்னணியுடன் பொது சேவையில் எனக்கு அனுபவம் உள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக அரசியல் துறையில் மக்களுக்கு சேவை செய்து வருகிறேன். அவர்களுடன் எப்போதும் இருந்து வருகிறேன் என்றார்.

வயநாடு தொகுதியில் கம்யூனிஸ்டு சார்பில் சத்யன் மொகேரி போட்டியிடுகிறார். எனவே அங்கு தற்போது மும்முனை போட்டி நிலவுகிறது.

Tags:    

Similar News