இந்தியா

ராகுல் காந்திக்கு ஒருபோதும் ஆதரவு இல்லை-கண்ணீர்விட்ட ஜெகன்மோகன் ரெட்டி

Published On 2024-05-03 04:29 GMT   |   Update On 2024-05-03 05:27 GMT
  • என்னை 16 மாதங்கள் ஜெயிலுக்கு அனுப்பியது காங்கிரஸ்.
  • பா.ஜ.க.வுக்கு தான் அவருடைய ஆதரவு இருக்கும்.

திருப்பதி:

ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி நேற்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவருடைய சகோதரி சர்மிளா தாக்கி பேசி வருவது குறித்து கேள்வி எழுப்பினர். அதனை கேட்டதும் ஜெகன்மோகன் ரெட்டி கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் அவர் கூறியதாவது:-

ஒரு குடும்பத்தில் இருந்து ஒருவர் அரசியலுக்கு வந்தால் போதும் அதனால் என்னுடைய சகோதரியை அரசியலுக்கு வர வேண்டாம் என கெஞ்சி கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர் கேட்காமல் தெலுங்கானா அரசியலில் இறங்கினார்.

சந்திரபாபு நாயுடு தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியுடன் கைகோர்த்துக் கொண்டு எனது சகோதரியை ஆந்திர மாநிலத்தில் அரசியலில் களமிறக்கி உள்ளனர். இதனால் எனது குடும்ப உறவுகள் சீர்குலைந்துள்ளன. அரசியலில் இருந்தாலும் இருவரும் மக்களுக்கு நன்மையை செய்யுங்கள் எனக்கூறி எங்களுடைய தாயார் ஒதுங்கி இருக்கிறார்.

ஆந்திர மாநிலத்தில் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெறும். தனி மனிதர்களை பார்த்து ஆதரவு அளிப்பது எனது நோக்கம் அல்ல. மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டு திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கிறேன்.

பிரதமர் மோடியின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை வரவேற்கிறேன். அதே நேரத்தில் சிறுபான்மையினர் மீதான அவரது கருத்துக்கள் குறித்து எனக்கு உடன்பாடு இல்லை.

ராகுல் காந்திக்கும், எனக்கும் ஆரம்பத்தில் இருந்தே ஒத்துப்போகவில்லை. ராகுல் குறித்து என்னுடைய கருத்து ஒருபோதும் பாரபட்சமற்றதாக இருக்க முடியாது. என்னை 16 மாதங்கள் ஜெயிலுக்கு அனுப்பியது காங்கிரஸ்.

எனது குடும்பத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி முயற்சி செய்தது. அதேபோல் ராகுல் காந்திக்கு ஒரு போதும் ஆதரவு இல்லை என்ற நிலையில் இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிடுகிறது. இங்கு தெலுங்கு தேசம் கூட்டணி மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் இடையே தான் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

ஜெகன்மோகன் ரெட்டி, ராகுல் காந்திக்கு ஆதரவு இல்லை என தெரிவித்திருப்பதன் மூலம் அவர் வெற்றி பெற்றாலும் பா.ஜ.க.வுக்கு தான் அவருடைய ஆதரவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஆந்திராவில் 25 தொகுதிகளில் யார் வெற்றி பெற்றாலும் மோடிக்கு தான் ஆதரவு கிடைக்கும் என பா.ஜ.க.வினர் உற்சாகமடைந்துள்ளனர்.

Tags:    

Similar News